பக்கங்கள்

16 மே 2011

ஊடகவியலாளருக்கு இலங்கையில் பாதகமான சூழலே காணப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து அமைதியும் பாதுகாப்பும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் ஆபத்தான சூழலே நிலவி வருவதாக சுதந்திர ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி தெரிவித்தார்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த தர்மரத்தினம் சிவராம், ஐயாத்துரை நடேசன் ஆகியோரின் நினைவு தின நிகழ்ச்சியில் யுத்தத்தின் பின்னரான கா காட்டத்தில் ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு வெள்ளவத்தை தமிழ்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நினைவுப்பேருரை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இராசநாயகம் பாரதி தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி தொடர்ந்து உரையாற்றுகையில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களான சிவராம், நடேசன் போன்றவர்கள் கொல்லப்பட்டனர். தமக்கு உயிராபத்து என அறிந்து கொண்ட போதிலும் உண்மையை வெளிப்படுத்தியதற்காக அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டது.
இப்போது இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டது. அமைதி நிலவுகிறது என பிரசாரம் செய்யப்படுகிறது. யுத்தம் முடிந்து விட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் அமைதி நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் உள்ளது என கூறமுடியாது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்களும் உயிராபத்துக்களும் இருந்ததோ அதே போன்றே இப்போதும் அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் தொடர்ந்து காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இதுவரை 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் கொலையாளிகளில் ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் பேராசிரியர் கீதபொன்கலன் சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவர் ஏ.நிக்ஷனும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், உட்பட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.