பக்கங்கள்

05 மே 2011

ஒசாமா கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்க சிறப்பு படையினர் அல்கைடா தலைவர் ஒசாமா பின்லாடனை உயிருடன் கைது செய்த பின்னரே சுட்டுக்கொலை செய்துள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பின்லாடன் உயிருடன் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்லாடனின் மகள் தெரிவித்துள்ளதாகவே அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கப் படையினர் தாக்குதலை மேற்கொண்ட சில நிமிடங்களில் தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்லாடனின் மகள் தெரிவித்துள்ளார். பின்லாடன் சுடப்பட்டதை அவரின் மகள்கள் இருவர் நேரடியாக பார்த்துள்ளனர்.
பின்லாடன் தங்கியிருந்த இடத்தில் இருந்து குண்டுகள் துளைக்கப்பட்ட நான்கு சடலங்களை பாகிஸ்தான் படையினர் கைப்பற்றியதுடன், இரு பெண்கள் உட்பட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 2 வயது முதல் 12 வயது வரையான ஆறு சிறுவர்களும் அடங்கியுள்ளனர். எனினும் அங்கிருந்து ஆயுதங்களோ அல்லது வெடிமருந்துகளோ மீட்கப்படவில்லை.
வீட்டில் இருந்த தப்பிச் செல்வதற்கான பதுங்கு குழிகளோ அல்லது நிலத்திற்கு கீழான பாதைகளோ இருக்கவில்லை. அந்த வீட்டில் பின்லாடன் கடந்த 5 வருடங்களாக தங்கியிருந்துள்ளார். எனினும் அந்த வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் அயலவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 20 அடி உயரம் கொண்ட சுவர்கள் மிகவும் ஆச்சயமானவை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் உள்ள இருவர் தனது கடையில் குளிர்பானங்களும், சிகரட்டுக்களும் வாங்குவதாக பின்லாடனின் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்லாடனின் வீட்டில் எருமைகளும், மாடு ஒன்றும், 150 கோழிகளும் இருந்ததாகவும் பாகிஸ்தான் படையினர் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டைக் கட்டிக் கொடுத்த காண்டிராக்டரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று இவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் குல் முகம்மது. ஆனால் இவரை பெரும்பாலும் செல்லமாக குல் மதா அல்லது மிது கான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாம். இவர் அபோதாபாத் அருகில் உள்ள பிலால் நகரில் வசித்து வருகிறார். இவரை நேற்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
50 வயதாகும் குல் முகம்மது, கைபர்-பக்தூன்கவா மாகாணத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாகத்தான் அபோதாபாத் அருகே வசித்து வருகிறார். எனவே பின்லேடனுக்காகவே இவர் இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கும் பின்லேடனுக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோக வீடு கட்ட உதவியர்கள், கட்டுமானப் பணிக்கு பொருட்களைக் கொடுத்து உதவியர்கள் என பல தரப்பினரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹிஸ்புல் முஜாஹிதினுக்கு சொந்தமான வீடு?
இதற்கிடையே, பின்லேடன் வசித்து வந்த வீடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்குச் சொந்தமான வீடு என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அமைப்பினர்தான் லேடனை பாதுகாப்பாக இங்கு கொண்டு வந்து தங்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.