பக்கங்கள்

19 மே 2011

கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா?

கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்லர்ளூ எல்லோருக்குமே வாழ்க்கைக்கான தொழில் இருக்கிறது. எனவே, காலம் மாறும் போது, காட்சி மாறும்போது தங்களையும் உருமாற்றிக் கொண்டு, ஆட்சி அதிகாரங்களைத் துதி பாடுபவர்களாக எமது படைப்பாளிகள் இருக்கக் கூடாது என்றும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
அறிவோர் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலக்கியத்தின் அடிப்படை மனித நேயம், நல்ல மனிதராக வாழ்வதற்கு முயற்சி செய்யும் ஒருவர்தான் அடுத்த கட்டத்தில் இலக்கியம் படைப்பதற்குத் தகுதி பெற்றவர் ஆகிறார். தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாகவும், சுற்றத்தாருக்கு ஒரு நல்ல அயலவனாகவும், நண்பர்களுக்கு இடுக்கண் களையும் நட்பாகவும் இல்லாமல் ஒருவர் படைப்பாளியாக முடியாது. இந்த மானுட நேயம் இல்லாமல் ஒரு படைப்பாளியால் தனது அனுபவங்களை அடுத்தவரிடம் தொற்ற வைக்க முடியாது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏறத்தாழ எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோவொரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான்.கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் 'காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்' என்று சொல்லியிருந்தார். இப்போது காலம் மட்டுமல்ல: அவருடன் உறவு கொண்டிருந்த கலை இலக்கியப் படைப்பாளிகளும் அவரைக் கைகழுவி விட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரையில் எந்தவொரு படைப்பாளியோ இலக்கிய அமைப்போ அவர் எங்கே எப்படி இருக்கிறார் என்று கேட்கத் துணியவில்லை. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மானுட நேயம் என்னும் தமது அடிப்படைத் தகுதியை படைப்பாளிகள் இழந்துவிடக்கூடாது.
இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்பார்கள். சமீபத்தில் எமது மூத்த எழுத்தாளர் ஒருவர் 'தீராநதி' இல் எழுதிய 'நந்திக் கடலில் கரைந்த கனவுகள்' என்ற சிறுகதையைப் படித்தேன். மாவிலாறு அணையில் சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசனத்தை தடுத்து விடுதலைப் புலிகள் தொடக்கி வைத்த யுத்தமே ஒரு சனியனைப் போல நந்திக் கடல் வரை பின்தொடர்ந்து இத்தனை பேரழிவுகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதே கதையின் சாராம்சம். இலக்கியவாதிகள் படைப்புகளில் காலத்தைப் பிரதிபலிக்கும்போது கூடவே தங்கள் விமர்சனப் பார்வையையும் பதிந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தக் கதையில் எழுத்தாளர் படைப்பிற்குரிய விமர்சன எல்லையையும் தாண்டி வரிக்கு வரி நஞ்சையே கக்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டதற்கான காரணங்கள் அப்படியேதான் நீடிக்கின்றன. அந்த நியாயங்களைப் படைப்புகளில் மறுதலிக்க முற்படுவது வரலாற்றுப் பிழையாகவே அமையும்.
கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன் சமூகத்தின் மீதான தனது பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் ஆணித்தரமாகச் சொந்தப் பெயரிலேயே பதிவு செய்து வருகிறார். கருத்துகளை புனை பெயர்களில் மறைந்து கொண்டு சொல்ல வேண்டிய காலச் சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், புனை பெயர் எழுத்துகளுக்கும் ஒரு அறநெறி இருக்கின்றது. ஒவ்வொரு ஊடகத்தினதும் ஆசிரியர் பீடத்திற்கேற்பத் தனது எழுத்தை, கருத்தை, சுயத்தை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு ஊடகத்திற்கெனவும் ஒவ்வொரு புனைபெயர் வைத்துக் கொண்டு எழுதும் போக்கு உருவாகி வருகிறது. இந்த எமுத்து விபச்சாரத்தனம் கலை இலக்கியப் படைப்பினுள் ஊடுருவுவது படைப்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் அறிமுக விழாவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலை இலக்கிய விமர்சகர் சி.ரமேஷ், சு.குணேஸ்வரன், நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஆகியோரும் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.