பக்கங்கள்

28 நவம்பர் 2012

உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆங்காங்கும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பரவலாகவும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. நேற்று மாலை 6.05 மணியளவில் வீடுகள், ஆலயங்கள் என்பவற்றில் தீபங்கள் ஏற்றியும், மணி ஓசை எழுப்பியும் தமிழ் மக்கள், தமது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். இதன் போது பல இடங்களில் படையினர் கெடுபிடிகள், இடையூறுகள் என்பவற்றை மேற்கொண்டனர். இருந்த போதும் அவற்றுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் நேற்று மாவீரர்களுக்காக விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில்... யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் வீடுகள், ஆலயங்களில் மாவீரர் நினைவாக தீபங்கள் ஏற்றப்பட்டன.பல்வேறு இடங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு நேற்று மாலை 6.05 மணிக்கு மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் இரு தினங்களுக்கு முன்னரே பல்கலைக்கழக வளாகத்தைச் சூழ்ந்துகொண்ட நிலையிலும் போரில் இறந்துபோன தமது உறவுகளுக்காக பல்கலை மாணவர்கள் இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை அனுஷ்டித்தனர். இதேவேளை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இராணுவத்தினர் சூழ்ந்துகொண்ட சமயம் பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த மாவீரர் நினைவிடத்தில் மாணவர்கள் தமது வணக்கத்தைச் செலுத்திக்கொண்டனர். மாணவியர் விடுதிக்குள் புகுந்த இராணுவம் யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் விடுதி அறைகளின் கதவுகளை உடைத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த தீபங்களை அணைத்ததுடன் 2 மாணவிகளுக்கு துப்பாக்கியை வைத்து மிரட்டியுமுள்ளனர். நேற்று பகல் பல்கலைக்கழக சூழலை சுற்றிவளைத்திருந்த இராணுவத்தினர் மாலை 6 மணியானதும் பல்கலைக்கழக ஆண்கள், பெண்கள் விடுதிகளைச் சூழ்ந்துகொண்டனர். ஆண்கள் விடுதியில் மாலையில் பரபரப்பு ஏற்பட்டபோது அங்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பத்தொடங்கினர். இவ்வாறு ஆண்கள் விடுதியில் மாணவர்களும் இராணுவத்தினரும் முரண்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பெண்கள் விடுதியில் ஒளிரத்தொடங்கின மாவீரர் நினைவுத் தீபங்கள். இதனை அவதானித்த இராணுவத்தினர் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டனர். வாசல் கதவு பூட்டப்பட்டிருந்ததால், தண்ணீர்த்தாங்கி வழியாகக் கட்டடத்துக்குள் நுழைந்தனர் இராணுவத்தினர். இதன்போது விடுதியின் அறைக் கதவுகளையும் அவர்கள் பலவந்தமாக உடைத்தனர். ஆயுதங்களுடன் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் மாணவிகள் பீதி அடைந்தனர். இரண்டு மாணவிகளது தலையில் துப்பாக்கியை வைத்த படையினர் "உங்களைச் சுட்டுவிடுவோம்" என்றும் மிரட்டியுள்ளனர். விடுதிகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களை அணைத்த பின்னரே அங்கிருந்து படையினர் வெளியேறினர். எனினும் இராணுவத்தினர் பல்கலைக்கழக வெளிப்புறத்தில் நேற்று இரவு முழுதும் சூழ்ந்து நின்றதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை சிவில் உடையில் வந்த படைப் புலனாய்வாளர்கள், மருத்துவபீட மாணவர்கள் ஐவரின் அடையாள அட்டைகளை போட்டோப்பிரதி எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் குறித்த மாணவர்களையும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நகரில் எரிந்த தீபங்களை பலவந்தமாக அணைத்த படையினர் யாழ். நகரில் பிறவுண் றோட்டில் நேற்று மாலை வீடொன்றின் முன்பகுதியிலும் மதிலிலும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அங்கு திடீரென ஜீப்பில் வந்த இராணுவத்தினர் குறித்த இடத்தில் இறங்கி வந்து "ஏன் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது?" என்று கேட்டுள்ளனர். "கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு விளக்கேற்றியுள்ளோம்" என்று வீட்டார் கூறியுள்ளனர். அதற்கு இராணுவத்தினர் "இன்று மாவீரர் நாள் தானே" எனக் கூறிவிட்டு, வாசலில் வாழைமரத் துண்டம் நடப்பட்டு ஏற்றப்பட்டிருந்த தீபத்தை தட்டி கீழே விழுத்திவிட்டு ஏனைய சுட்டிகளையும் அணைத்துவிடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர். வந்தவர்களில் ஒருவர் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. இதேவேளை, பாஷையூர், குருநகர் பகுதிகளிலும் வீடுகளின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் படையினரால் அடித்து அணைக்கப்பட்டதுடன் அப்பகுதியில் மக்களும் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குருநகர் வீடு ஒன்றில் ஒளிர விடப்பட்டிருந்த "சார்ஜர்' லைற்றைக் கூட அணைக்குமாறு படையினர் உத்தரவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று காரைநகர் பகுதியிலும் சுமார் 10 இடங்களில் ஏற்றப்பட்டிருந்த மாவீரர் தீபங்களைப் படையினர் உடனடியாக அணைத்துள்ளனர். அத்துடன் அங்குள்ள ஆலயங்களுக்கும் நேற்றுப் பிற்பகல் முதல் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் ஆலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் பயத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. வாகனங்களுக்கும் கெடுகாலம் மாவீரர் தினமான நேற்று யாழ். நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரினால் கடுமையாகச் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் யாழ். நகரில் பல பிரதேசங்களிலும் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. யாழ். நகருக்குள் பிரவேசித்த சகல வாகனங்களும் தட்டாதெருச் சந்தி, ஓட்டுமடம், அராலிவெளி என்பவற்றில் வைத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் குடாநாட்டின் சகல பிரதேசங்களிலும் படையினர் தமது ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். "பிக்கப்பிலும்' கால் நடையாகவும் படையினர் சகல வீதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. வன்னியில்... வன்னிப் பகுதியிலும் நேற்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது. வீடுகள், பொதுஇடங்கள், ஆலயங்கள், துயிலும் இல்லங்கள் என்பவற்றில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இராணுவத்தினரின் கெடுபிடிகள், அடாவடிகள் என்பவற்றுக்கு மத்தியிலும் மக்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடினர். கிளிநொச்சி மத்திய கல்லூரி வாயில், பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, புதுமுறிப்பு சந்தி, செல்வா நகர், அக்கராயன், துணுக்காய், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக, வவுனியா நகர்ப் பகுதி, பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள இடம் போன்ற பல்வேறு இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. இதேவேளை கிளிநொச்சி கனகபுரம் வீதியில் தவஅரசன் பல்பொருள் வாணிபத்துக்கு முன்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருந்தபோது அங்கு வந்த இராணுவத்தினர் அவற்றை காலால் உதைத்து சேதப்படுத்தி கடைக்காரரையும் எச்சரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கடைக்காரர் கிளிநொச்சி வர்த்தக சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதியில் நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற இராணுவத்தினர் அங்கு ஏற்றப்பட்டிருந்த தீபங்களையும் காலால் உதைத்துச் சேதப்படுத்தி மிரட்டியுமுள்ளனர். "இன்று கார்த்திகைத் திருநாள். விளக்கேற்றுவதற்குத் தடை இல்லையென பொலிஸார் அறிவித்திருக்கின்றனர். பின்னர் ஏன் நீங்கள் தடை செய்கிறீர்கள்?" என்று அந்த கடை உரிமையாளர் இராணுவத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு "மேலிடத்து உத்தரவு'' என சொல்லிவிட்டு படையினர் சென்றனர் என்று குறித்த கடை உரிமையாளர் "உதயனு'க்குத் தெரிவித்தார். அந்தியேட்டியும் தப்பவில்லை. இதேவேளை பரந்தன் பகுதியில் வீடொன்றில் நடைபெற்ற அந்தியேட்டி நிகழ்வொன்றுக்குச் சென்ற இராணுவத்தினர் அந்த நிகழ்வையும் குழப்பியுள்ளனர். அத்துடன் பரந்தன் சந்திக்கு அருகில் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு ஏற்றப்பட்டிருந்த சிட்டி விளக்குகளையும் உடைத்தெறிந்துள்ளனர். அத்துடன் பரந்தன் சந்தியில் நின்ற இளைஞர்களையும் இராணுவத்தினர் கொட்டன் கொண்டுமிரட்டி வீடுகளுக்குச் செல்லுமாறு துரத்தியுள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன. புலம்பெயர் நாடுகளில்.. பிரிட்டன், கனடா, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ் போன்ற புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரர்களை தீபமேற்றி நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்தில்... தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதுதவிர ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் மாவீரர் நாள் கூட்டங்களையும் ஒழுங்கு செய்திருந்தன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களிலும் மாணவர்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.