பக்கங்கள்

30 நவம்பர் 2012

சிவாஜிலிங்கம் வீட்டின் மீது குண்டு வைக்க மறுத்து கனடா தப்பிய படையதிகாரி!

தேசிய தலைவரின் தாயாருடன் சிவாஜிலிங்கம் 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைக்க இராணுவம் தமக்கு உத்தரவிட்டதாக, இராணுவத்தில் இருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற இளம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றிய ரவீந்திர பிரசன்ன வடுதுரு பண்டானகே என்ற 38 வயதான அதிகாரி, அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு அகதியாக தப்பிச் சென்றுள்ளார். அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றமை குறித்தும், இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளின் உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பிலும் தகவல்களை வழங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் கனடாவின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினர் விசாரணையை மேற்கொண்டனர். இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்குமாறு இராணுவத்தலைமையில் இருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகவும், எனினும் தாம் அதனை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தாம் கொழும்புக்கு மாற்றப்பட்ட நிலையில், 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு தப்பி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தகவலை கனடாவின் த நசனல் போஸ்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினர் இறுதி யுத்தக் காலப்பகுதியிலும், அதற்கு பின்னரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுவடைந்திருப்பதாக த நசனல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.