பக்கங்கள்

10 நவம்பர் 2012

பிள்ளைகளை பராமரிக்க தவறிய தந்தைக்கு காவலூர் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்தது!

சிறுவர்களைப் பராமரிக்கத் தவறியமை மற்றும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியமை ஆகிய குற்றங்களுக்காக தந்தை ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதே குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தண்டனை வழங்கப்பட்டது. புங்குடுதீவைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய தந்தையே தனது பிள்ளைகளை சிறுவர்களை பராமரிக்கத் தவறியுள்ளார் என்றும் சிறுவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார் என்றும் தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நன்னடத்தை அதிகாரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதுதொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவின் நடவடிக்கையால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வந்தது. விசாரணையின் போது சந்தேக நபரான தந்தை தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ஏனைய 7 மாதங்களும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாத காலச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார். இதே குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறை கரம்பொன்னைச் சேர்ந்த தந்தை ஒருவருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 11 பிள்ளைகளின் தந்தையான அவர் மீதும் தனது பிள்ளைகளை பராமரிக்காமை மற்றும் அடித்துத் துன்புறுத்துகின்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆரம்ப விசாரணையின் பின்னர் சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.