பக்கங்கள்

08 ஜூலை 2014

படகில் வந்தவர்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தற்காலிக இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்த 153 பேர் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுவரை பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது இவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்திரேலிய கடற்படைக்கலனில் தங்க வைக்கப்படிருக்கிறார்கள் என்று முதல் முறையாக ஒப்புக்கொண்டது. மேலும் இவர்களில் யாரும் மூன்றுநாள் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்றும் ஆஸ்திரேலிய அரசு நீதிமன்றத்தில் இன்று உறுதிமொழி அளித்திருக்கிறது. இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இதே போல ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரி வந்த 41 இலங்கையரை கடலிலேயே விசாரித்து, அவர்களின் அகதித்தஞ்சக் கோரிக்கைகள் நிராக்கப்பட்ட பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 41 பேரும் நேற்று திங்களன்று இலங்கையை சென்றடைந்தனர். இவர்களில் 9 சிறார் உட்பட 27 பேரை நீதிமன்றம் செவ்வாயன்று பிணையில் விடுவித்தது. மீதமுள்ள 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவால் திரும்ப அனுப்பப்பட்ட 41 பேரில் நான்கு பேர் மட்டுமே தமிழர்கள் என்று ஆஸ்திரேலியா கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.