பக்கங்கள்

26 ஜூலை 2014

காரைநகரில் சிறுமியை புலியுடைதரித்தவர் தூக்கிச்சென்றாராம்!

News Serviceகாரைநகர் முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர், சிறுமியை அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார் சிறீலங்காவின் சிங்களப்பிரதமர் டி.எம். ஜயரட்ண. நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய விசேட உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ஜயரத்ன கூறியதாவது. "கடந்த 15ஆம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியொருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த(சிங்களப்படையினன்)கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பாக அதிபரிடம் தாயார் வினவியுள்ளார். தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இரண்டுபேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது'' என்று சிறீலங்கா பிரதமர் ஜயரட்ண தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.