பக்கங்கள்

03 ஜூலை 2014

யாழ்,மாநகரசபை வாகனம் விபத்து!6பேர் இடைநிறுத்தம்!

யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். யாழ். மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதனின் வாகனத்தை அனுமதியின்றி திருட்டுத் தனமாக எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. இதனால் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் 2சாரதிகளும் 4 உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கடந்த 20 ஆம் திகதி யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டும் அல்லாது குறித்த அறுவரும் போதையிலும் இருந்துள்ளனர். யாழ் மற்றும் தீவுப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தும் உள்ளனர். அதனையடுத்து அராலி சந்தியில் உள்ள மின்கம்பத்தோடு வாகனம் மோதுண்டமையினால் வாகனம் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.