பக்கங்கள்

05 ஜூலை 2014

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணையும் பிரித்தானியா நாடுகடத்துகிறது!

படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக சனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க சர்வதேச ரீதியான பிரகடனமொன்று அண்மையில் லண்டனில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த விசேட பிரகடனத்தை பிரித்தானியாவே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் நிலைமையில் ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்த முயற்சித்து வருவதாக சனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினரால் பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்திருக்கும் நிலையிலும் அப்பெண்ணை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்திருக்கிறது. குறித்த பெண் கடந்த 2010ம் ஆண்டில் பிரித்தானியாவை வந்தடடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணிய தொடர்பு, படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானமை போன்ற காரணிகள் எடுத்துரைக்கப்பட்டும், அவை குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சனல் 4 சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த வலயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா உறுதியளித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருந்தார். எனினும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையும்
குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.