பக்கங்கள்

14 ஜூலை 2014

யாழில்,அனந்தியின் உறவினர்கள் கைதாகி விடுதலை!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறவினர்கள் இருவர், தம்மை அவதூறாகப் பேசினர் என்று குற்றம்சாட்டி வட்டுக்கோட்டை பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகத்துக்கு முன்பாக அவருடைய உறவினர்கள் இருவர் நேற்று மாலை நின்றிருந்தனர். இதன்போது அங்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர் என்றும் இருவரையும் வாகனத்தில் ஏற்றி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு, அவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இருவரும் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அனந்தி சசிதரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் இருவரும் எனது உறவினர்கள், அரச உத்தியோகத்தர்கள். அவதூறு வார்த்தைகளைப் பேசினார்கள் என்று பொய்கூறியே பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். திட்டமிட்டு என்னை பழிவாங்கும் நோக்கில் சிலர் பொலிஸாரை ஏவிவிட்டுச் செய்யப்பட்ட காரியம் இது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.