பக்கங்கள்

17 ஜூலை 2014

மலேசிய விமானத்தை உக்ரைனில் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவுப்படை!

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. எம்.ஹெச். 17 என்ற அந்த விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகள் பக் ஏவுகணை வீசித் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் எரிந்த பாகங்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. உக்ரைன் விமானங்களை ரஷ்யாவும், ரஷ்ய விமானங்களை உக்ரைனும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் மலேசிய விமானத்தை உக்ரைன் அல்லது ரஷ்யா தவறுதலாக நினைத்து தாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேருமே உடல் கருகி இறந்துவிட்டதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுட்டுத் தள்ளப்பட்ட விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 71 என்ன ஆனது என்று தெரியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.