பக்கங்கள்

16 ஜூலை 2014

திருமணமாகி 11ம் நாள் எயிட்ஸ்,யாழில் இளம்பெண்ணின் அவலம்!

நீண்ட காலமாகவே யாழில் உள்ள ஒரு எயிட்ஸ் நோயாளியிடம் சில கேள்விகளை கேட்க்கவேண்டும் என்று இருந்தேன். யாழில் சுமார் 2,000 எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எவரும் முன் வந்து எந்த தகவலையும் தர தயார் இல்லை. ஒரு விழிப்புணர்வுக்காக நான் ஒரு நேர்காணலை எடுக்க விரும்பினேன். இது குறித்து அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா ? இதோ ஒரு இளம்பெண் தனது எண்ணங்களை எம்மோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
எப்படி உங்களுக்கு கலியாணம் நடந்தது ? உறவுமுறையான அவருக்கும் எனக்கும் பொருத்தம் பார்த்துப் பேசி திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். திருமணத்தின் பின்னர் அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது. காய்ச்சலும் இருந்தது. அது மாறவில்லை. அதனால், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அவருக்கு ரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்த்தனர். அவருக்கு எயிட்ஸ் என்பதனை திருமணம் செய்து 11ஆவது நாளில் பரிசோதனை உறுதிப்படுத்தியது. அதனைச் சொல்லும்போது எனக்கு வயது 18 . என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் அழுது புலம்பினேன்.
கணவரின் மனநிலை எப்படியிருந்தது ? அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது. ஆனால், அவர் கூறினார், அநியாயமா உன் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன் என்று. அவர் அவ்வாறு கூறியது தனக்கு ஏற்கனவே இருக்கு என்பதனை மறைத்ததனால் கூறினாரா ? அல்லது தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து, எனக்கும் அதனைப் பரப்பி விட்டேன் என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறினாரா என்பது தெரியாது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், நான் அதன் பின்னர் அது பற்றிக் கேட்பதைத் தவிர்த்து விட்டேன்.
கணவருக்கு எய்ட்ஸ் என்றபோது ? அவருக்கு எயிட்ஸ் என்ற விடயத்தை அவருடைய குடும்பத்தினருக்குச் சொன்னபோது அவர்களுக்கும் அதிர்ச்சிதான். திருமணம் செய்து 16 வருடங்களின் பின்னர்தான் அவர் பிறந்துள்ளார். அதனால், அவரை நல்ல செல்லமாக வளர்த்துவிட்டனர். நோய் வந்துவிட்டது. இனி என்ன செய்வது. அவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார். குடிக்காது இருந்தால் இன்னும் சிறிது காலத்துக்கு வாழமுடியும். குடிக்க வேண்டாம் என அவருக்கு நான் கூறிவந்தேன். நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவார். ஆனால், அவருக்கு அந்தப் போதையில் இருக்கும் போதுதான் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. தனது நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் மட்டும் இப்படியாகிவிட்டேன். அவர்களைப் போல வாழ முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதற்குச் சிகிச்சை பெறுமாறு கேட்டுப் பார்த்தோம். அவர் கேட்கவில்லை. முன்னர் அவர் எப்படி மற்றவர்களின் பேச்சைக் கேட்கமாட்டாரோ அவ்வாறுதான் இறுதியிலும் கேட்கவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார்.  
அதுக்குப் பிறகு ? எனக்கு முன்னரும் இக்கட்டான காலம்தான். நான் பிறந்து 6 மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இரண்டாவது திருமணம் செய்து 6 பிள்ளைகள். அம்மாவிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லை. சீதனம் கேட்கவில்லை என்பதற்காக எனக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். பிறகு எனது ரத்தம் எடுத்து சோதித்தனர். எனக்கும் அவர் மூலமாக எயிட்ஸ் பரவியமை உறுதிப்படுத்தப்பட்டது. என்னால் அதனை நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. மீண்டும் அழுது புலம்புகிறேன். அந்தநேரம் நான் இருந்த நிலமையை என்னால் விபரிக்க முடியாதுள்ளது.
 வீட்டுக்கு எப்பிடி சொன்னீங்கள் ? யாரிடம் சொல்வது ? என்னத்தைச் சொல்வது என்று மூளை எல்லாம் குழம்பிப் போய் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். எச்.ஐ.வி. அவ்வாறு தான் வரும் என்று அப்போழுதுதான் தெரியும். அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா சொன்னார், அது உன் தலையெழுத்து. நான் என்ன செய்யிறது ? என்றார். அதன் பின்னர் அம்மா என்னைத் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். பாசத்தில் கூட்டிச் செல்லவில்லை. கணவர் தந்த நகைகள் என்னிடம் இருந்தன. அதனைப் பெறத்தான் என்னைக் கூட்டிச் சென்றார்.  
ஊருக்குள் என்ன பேசிக் கொண்டார்கள் ? அவர் இறந்தபோது பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. பெயர் வரவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர், முகவரி என்றெல்லாம் வந்துவிட்டது. அதனால், எனது இடத்து மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்படி வந்ததனால் ஊரார் என்னை ஒதுக்கி விட்டனர். சிலர் நேரடியாக வந்து கேட்டனர், உனக்கு எயிட்ஸ் உள்ளதாம், உன்னுடன் பழகக்கூடாதாம் என்று சொல்றாங்க என்று. மிகவும் கவலையடைந்தேன். நோய் வந்த பிறகு நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதில்லை. என்னைச் சமூகம் ஒதுக்கியது. அதனைவிட வீட்டில் எனது அம்மா கூட ஒதுக்கினார். வீட்டிலேயே நான் ஒதுக்கப்பட்டதால் சமுதாயம் ஒதுக்கியதனை நான் பெரிதாக கொள்ளவில்லை. நான் எந்தவொரு தவறும் செய்திருக்கவில்லை. வீட்டில் அம்மா சொல்வார், இப்படி இருப்பதால் தம்பி ஆக்களுக்கு கலியானம் செய்ய முடியாது. எங்காவது போ அல்லது செத்துப்போ என்றார். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. (அழுகிறார்… அழும்போதெல்லாம் அவரது கையைப் பற்றிப் பிடித்து அவரை ஆறுதல்படுத்தி சாதாரண நிலைக்குக் கொண்டுவருகிறார் அவருக்கு அருகில் இருக்கும் அவரது தற்போதைய கணவர்)  
அம்மா என்ன செய்திருக்கவேண்டும் ? திருமணத்துக்கு முன்னர் அவரைப் பற்றி எனது பெற்றோர் விசாரித்திருக்க வேண்டும். திருமணம் செய்து தள்ளிவிட்டால் சரி என்று அம்மா நினைத்து விட்டார்தானே. நோய் இருப்பது தெரியாதுவிட்டாலும் அவரது முன்னைய பழக்கவழக்கங்கள் பற்றியாவது விசாரித்திருக்கலாம் தானே ? அவர் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் பலவீனமானவராக இருந்துள்ளார். அதனை அவர் பின்னர் சொல்லியிருக்கிறார்.  
அதுக்குப் பிறகு அம்மா ? அதன் பின்னர் என் மனதை நோகடிக்கும் வகையில் கதை சொல்வார். தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொண்டார். சின்னப் பிள்ளைகள் இருப்பதனால் என்னை வைத்திருக்க வேண்டாம். வெளியேற்று என்று கிராம அலுவலர் தெரிவித்ததாக அம்மா சொன்னார். எனக்குப் பத்தொன்பதரை வயதாக இருக்கும்போது அவர் இறந்து விட்டார். கிராம அலுவலர் சொல்கிறார் என்கிறீர்கள் ? நான் எங்கு போவது ? யாழ்ப்பாணத்தில் இடமும் தெரியாது. வீட்டில் எனக்குத் தொல்லையாக இருந்தது. அதனால் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.  
தற்கொலையா ? ஆம், 700 தூக்கமாத்திரைகளை வாங்கி, 100 மாத்திரைகள் வீதம் பிரித்து வைத்து ஒவ்வொரு பிரிவாக 400 குழிசைகளை விழுங்கி விட்டேன். அதன் பின்னர் நான் மயங்க விட்டேன். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால், சாவும் வரவில்லை. கோமா நிலையில் இருந்து தப்பிவிட்டேன். நான் எங்காவது போக வேண்டும் என்று நினைத்து கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு போய், என்னை ஊரில் வாழ விடுகிறார்கள் இல்லை. கிராம அலுவலரிடம் சென்றால் குற்றம், வெளியில் சென்றால் குற்றம் என்கிறார்கள். நீங்கள் என்னை உயிர் பிழைக்க வைக்கவேண்டாம். எப்படியாவது சாகடியுங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.  
அவர்கள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் என்னை ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பின்னர்தான் நான் தற்போதைய நிலைக்கு வந்தேன். தற்போது பேட்டி தரவும் முடிகிறது. பேட்டி தருவதன் நோக்கம், இந்நோய் அடுத்தவர்களுக்கு வராதபடி இருக்க வேண்டும் என்பதே. அதற்காக என்னால் இயன்றதை நான் சொல்லுவேன். அதனைக் கேட்டு அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும். எனக்கு வந்த நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது.  
இவருடனான (இப்போது திருமணம்) சந்திப்பு எப்படி ? பிறகு நான் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்குச் சென்றேன். அங்குதான் இவரைக் கண்டேன். (தற்போது திருமணம் செய்திருக்கும் இளைஞனைக் காட்டுகிறார்). கடந்த ஜனவரியில் தாம் இருவரும் சேர்ச்சில் திருமணம் செய்துகொண்டோம்.  
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவரின் மனநிலை எப்படியிருக்கும் ? எய்ட்ஸ் நோயாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், எயிட்ஸ் நோயாளர்களை ஒதுக்கக் கூடாது. பாதிக்கப்படவர்கள் கவுன்சிலிங் எடுத்து எங்களைப் போல மாறமுடியும். தவறின் அவர்கள் 2 விதமான முடிவை எடுப்பர். ஒன்று தம்மை அழிக்க வேண்டும் என்று நினைப்பர் அல்லது இதனை இன்னும் பலருக்குப் பரப்ப வேண்டும் என்ற மனநிலை உருவாகிறது. இந்த இரண்டுமே ஆபத்துத்தான். அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளுவது சமுதாயம்தான்.  
சரி, உங்களைப் பற்றிச் சொல்லுங்களன்? (கணவனை நோக்கித் திரும்பினோம்) எனது அம்மா மனநோய்வாய்ப்பட்டவர். அதனால், அம்மா சின்னப்பிள்ளை மாதிரி. தனது வேலைகளைக்கூட செய்துகொள்ளமாட்டார். அப்பா குடித்துவிட்டு வருவார். ஒரு அக்கா வீட்டில்.வறுமை. நான் பாடசாலைக்குப் படிக்கச் செல்லும்போது சிலர் (ஆண்கள்) எனக்கு உதவுவதாகக்கூறி என்னை தவறான வழியில் பயன்படுத்த முற்பட்டனர். தவறான உடலுறவுக்குப் பயன்படுத்த முற்பட்டனர். பணம் தந்து கேட்பார்கள். அதனால், ஒரு கட்டத்தில் மது, சிகரெட், கஞ்சா எல்லாம் குடிக்கத் தொடங்கி விட்டேன். வீட்டில் எவரும் கண்டித்திருக்கவில்லை. எவரும் ஆலோசனை செய்திருக்கவில்லை. கேட்டிருந்தால் நான் தப்பியிருப்பேன்.  
பிறகு ? அதன் பின்னர் வெளிநாடு போக சந்தர்ப்பம் கிடைத்தது. அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு அங்கு என்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடமிருந்து கிடைத்தது. ஒரு வருடமாக அவளுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தேன். உடலுறவு கொண்டேன். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தேன். இரண்டாவது தடவை வந்துபோகும்போது மருத்துவப் பரிசோதணை செய்தனர். அதன்போதுதான் எனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியவந்தது. அவள் வேண்டுமென்றே எனக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பியமை பின்னர்தான் தெரிந்தது. அதுதான் சொன்னேனே சில பேர் தனக்கு தந்ததை 10 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்குவார்கள். அவர் என்னை நாஷமாக்கிவிட்டார். எனக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனால் 6 மாதங்கள் சிறையிலிருந்தேன்.  
எப்படி இலங்கை திரும்பினீர்கள் ? நவீனரக சூட்கேஸ் பெட்டியுடன் சென்ற நான், ஒரு சொப்பின் பையில் 2 சேட்டுடன் திரும்பி இலங்கைக்கு வந்தேன். வீட்டுக்கும் போகமுடியாது. முகம் கொடுக்க கஷ்டமாக இருந்தது. வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன். கடலில் விழுந்து செத்திடுவமா என்று யோசித்தேன். பின்னர் என்னிடம் உள்ள முழுப் பணத்தையும் கொண்டுசென்று கொழும்பில் பரிசோதித்தேன். எயிட்ஸ் என்பதனை உறுதிப்படுத்தினர். மருந்து எடுத்து வாழலாம் என்றனர். சில நாள்களின் பின்னர் இவரைச் சந்தித்தேன். (மனைவியைக் காட்டுகிறார்)  
உங்கள் வீட்டுக்குத் தெரியாதா ? வீட்டுக்குத் தெரியவந்தது. அக்கா கேட்டதனால் அவருக்குக் கூறினேன். அவர் கதறி அழுதார். “எனக்கு நோய் வந்திட்டுது அக்கா. வீட்டில எவருக்கும் சொல்லாதே அக்கா. அம்மா அப்பாவைக் கஷ்டப்படுத்தக்கூடாது. நான் இதோட செத்திடுவன். நான் உனக்கும் கரைச்சல் கொடுக்கமாட்டேன்” என்றேன். (அழுகிறார். கண்ணீர் வழிந்தோடுகிறது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்கிறார்). அக்காவுக்கும் அதிர்ச்சி. சிறிது நாள் சென்றபின்னர், அதில் தொடாதே, இதில் தொடாதே என்று அவளும் சொல்லத் தொடங்கிவிட்டாள். பின்னர் எனது உடுப்புகளை எடுத்து வெளியே எறிந்து போ என்று கலைத்து விட்டார். இவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு ? (மனைவியைக் குறித்து) நடந்ததை இவருக்குச் சொன்னேன் (மனைவிக்கு). ஆறுதல் வார்த்தை கூறினார். நீங்கள் குடிக்க வேண்டாம் என்றார். அன்றிலிருந்து நான் குடிப்பதில்லை. கவுன்சிலிங் போனேன். தற்போது தனியார் நிறுவனத்தில் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பெண்ணால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். என் வாழ்க்கை அதற்கு சரியான ஆதாரம். இப்போது உங்கள் மனநிலை எப்பிடி ? நான் பாதிக்கப்பட்டபோது, எனக்கு வந்த எண்ணம் என்னுடன் இது அழிந்திட வேண்டும் என்பதே. ஆனால், சிலர் இதனை இன்னும் பலருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னை ஒரு பெண்தானே அழித்தார். அதனால், இன்னும் பத்துப் பெண்களை அழிக்காமல் சாகமாட்டேன் என்ற மனநிலை உருவாகிறது. அவ்வாறே பெண்ணின் மனநிலையிலும் எண்ணம் ஏற்படுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து வாழமுடியும் என்பது பரப்பப்படவேண்டும். (இருவரிடமும் கேட்டோம்)  
நீங்கள் எடுக்கும் மருந்துகள் பற்றி ? இந்த நோய் ஏற்பட்டால் இரண்டு வகைப்பட்ட 3 குளிசைகள் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு வகைக் குளிசை 1998ஆம் ஆண்டு 15 ஆயிரம் ரூபா. மற்றையது 10 ஆயிரம் ரூபா. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை 3 ஆயிரம் ரூபாவுக்கு வந்து தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இவை பயன்படுத்துவதன் நோக்கம் நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கே. தற்போதுள்ள வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு உள்ளவர்களுக்கு உறுப்புகள் கழற்றவேண்டிவரும். விரும்பிய உணவு உண்ண முடியாது. ஆனால், எமக்கு எந்த உணவுக்கட்டுப்பாடும் இல்லை.  
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா ? எயிட்ஸ் நோயாளர்கள் இருவர் திருமணம் செய்வதென்றால் வெண்குருதி சிறுதுணிக்கை இருவருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். ஒருவருக்குக் கூடவும் மற்றையவருக்கு குறையவும் இருந்தால் கூடாது. ஏனெனில், உடலுறவில் ஈடுபட்டால் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு மாறி அது ஆபத்தாகிவிடும். இப்போது என்ன செய்கிறீர்கள் ? எம்மை எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், விழிப்புணர்வு ஊட்டவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உள்ளதனால் நாமாகவே அதனைச் செய்கிறோம். கத்தியால் குத்தப்பட்டவருக்குத்தான் அதன் வலி தெரியும். அவ்வாறே பாதிக்கப்பட்டிருக்கும் நாம் விழிப்புணர்வு செய்துவருகிறோம். எந்தவகை விழிப்புணர்வும் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்படும்போதுதான், முழுப்பயனையும் அடையமுடியும். நாங்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மேற்கொள்ள எங்கும், எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதற்கான உதவிகளைச் செய்யுங்கள் சுகதேகிகளே!  
நிறுவனத்தின் இணைப்பாளர் என்ன சொல்கிறார் ? இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் போனால் வேலையை மட்டும் செய்து உண்டு உடுத்து இருக்க வேண்டுமே தவிர எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளக்கூடாது எனப் பணிவுடன் அறிவுறுத்துகிறோம். வெளிநாட்டுக்குச் செல்வோர் இந்த விடயத்தில் இனிமேலாவது மிகவும் அவதானமாக இருங்கள். யாழ்ப்பாணத்திலுள்ள நோயாளர்கள் பலர் சிகிச்சை பெறச் செல்வதில்லை. பிடித்து அடைத்து விடுவார்கள் என்ற பொய்யான அச்சம். ஆனால், எந்தவிதப் பயமும் இல்லை. சந்தேகம் இருந்தால்கூட பரிசோதிக்கமுடியும். வெளிநாடு செல்வோர்க்கு விழிப்புணர்வூட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். கொண்டம்(condom) பாவித்து உடலுறுவு வைத்துக் கொள்ளலாமே ? இந்த எண்ணம் தவறு. பொதுவாகவே ஒரு குழந்தை கிடைத்து குறித்த கால இடைவெளிக்குள் இன்னொரு குழந்தை கிடைக்கக்கூடாது என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குத்தான் ஆணுறை (கொண்டம்) பயன்படுத்தப்படுகிறது. தவிர அதனைப் பயன்படுத்தி திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் என்பதற்கல்ல. 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தயாரித்தவரது பெயரிலேயே தற்போது அது அழைக்கப்படுகிறது. ஆனால், அதனைப் பயன்படுத்தி எப்படியும் வாழலாம் என்ற கருத்தையே வியாபாரிகள், வியாபார நோக்கத்துக்காக பரப்பி வருகின்றனர். இது தவறு என்று இவர்கள் கூறுகிறார்கள். கொண்டத்திற்கு இவ்வாறு ஒரு உண்மையான விளக்கம் சொன்ன தம்பதிகள் இவர்களாக தான் இருக்க முடியும்.

நன்றி: ஜெரா 
நன்றி: "மாற்றம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.