பக்கங்கள்

12 ஜூலை 2010

சீமான் கைதிற்கு வைக்கோ பலத்த கண்டனம்.





இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து பேசிய, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு, கடற்படையை ஏவி தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் பேசியதற்காக, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வர், ‘இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் ஒழுங்கு தன் கடமையைச் செய்யும்’ என தன் அமைச்சரை விட்டுக் கூறுகிறார்.
தமிழ்நாட்டில், இலங்கை அரசைப் பற்றியே பேசக்கூடாதாம். அப்படிப் பேசுவோரை சிறையில் அடைக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுமாம். தங்கள் உயிர்களையே தீயில் கருக்கிக் கொள்ளும் முத்துக்குமார்களைத் தந்த தமிழ்நாட்டில், இத்தகைய மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்களை, தமிழர்கள் தூசாகவே கருதுவோம்.
இயக்குநர் சீமான், பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தன் கருத்தைக் கூறுவதற்கு அனுமதிக்காத பொலிஸ்துறை, பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளது.
இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்தெழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.