பக்கங்கள்

10 ஜூலை 2010

அரசாங்கத்தின் தவறை மூடி மறைக்க விமல் வீரவன்ச ஆடும் நாடகமே உண்ணாவிரதம்.



அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்காக விமல் வீரவன்ஸ ஆடும் நாடகமே உண்ணாவிரத போராட்டமாகும். அதற்காக அவர் தற்கொலைக் குண்டுதாரியாகி விட்டார் என்று ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐ.நா. அலுவலகம் முன்பாக தொவில் ஆடி வேலையில்லை (பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்) இராஜதந்திரமே அவசியமானதாகும் என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தின் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் குதிக்க இருந்தார். அங்கேயே தற்கொலைத் தாக்குதல் நடத்தவிருந்தார். எனினும் உயர்மட்ட ஆலோசனையினால் ஐ.நா. வின் அலுவலகத்திற்கு முன்பாக படுத்துக் கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தை நகைச்சுவையாக எடுக்கமாட்டேன், அடக்குறைக்கு எதிராக குரல் கொடுப்பேன். எனினும் போராட்டம் எனும் பெயரில் உண்ணாவிரதத்தில் உடனடியாக குதிப்பதா? என்பது தான் எனது கேள்வியாகும்.
கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், அவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை என்பவற்றை முன்னெடுத்து இறுதியாகவே உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இறுதியில் மேற்கொள்ள வேண்டிய உண்ணாவிரதத்தை முதலிலேயே மேற்கொள்வதுதான் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்றது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும்.
உண்ணாவிரதம் இருக்கின்ற விமல் வீரவன்சவின் தலைமையிலான கட்சியின் பிரதியமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் உணவகத்தில் இருப்பதைக் கண்டேன். கட்சி உறுப்பினரைக் கூட அமரச் செய்ய முடியாதவர் ஏன் உண்ணாவிரதத்தில் குதித்தார்?
சிங்கள பௌத்தவாதிகளுக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை அரசாங்கத்திற்குள் இருக்கின்றது. ஹெல உறுமயவின் முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில் அதற்கான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
பட்டினி, விலையுயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக மக்கள் கதைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சிங்கள பௌத்தவாதத்தை தூண்டி விட்டு அதற்கு தலைமை ஏற்பதற்கே இவர் முயற்சிக்கின்றார்.
உண்மையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவே விமல் வீரவன்ஸ தற்கொலைதாரியாக விருந்தார். அவரது இதயத்திலும் அதுவே இருக்கின்றது. எனினும், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே ஐ.நா. அலுவலகத்துக்கு முன் தற்கொலைதாரியாகி விட்டார்.
தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்புவது போல சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய விமல் வீரவன்ஸ ஐ.நா.விற்கு முன்னால் படுத்துக் கொண்டார்.
பான் கீ மூனின் செயற்பாட்டை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல நிலைமை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இராஜதந்திர ரீதியில் செயற்படாமல் பேய் ஆடுவதன் ?மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதுவா இராஜதந்திரம்?
தூதுவராலயங்கள் நாட்டின் தலைநகரமாகவே பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கு முன்பாக சென்றால் கைது செய்யப்படுவார்கள். எனினும், ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக தொவில் ஆடுகின்றனர்.
கடனை வழங்கி வாட்டுகின்றது என்பதனால் சர்வதேச நாணய நிதியத்தின் முன்பாக ஏன் போக முடியாது? போனால் நாம் வருவோம். இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும்.
ஜனாதிபதி கூறினால் அல்லது உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் உண்ணாவிரதத்தினை அமைச்சர் விமல் வீரவன்ஸ கைவிட்டு விடுவார் என அக்கட்சி உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்கே விமல் வீரவன்ஸ தற்கொலை குண்டு தாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தான் உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.