பக்கங்கள்

17 மே 2010

வீரத்தமிழினம் ஒருபோதும் வீழாது என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.-சீமான்.


நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்கும் நிகழ்வாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நாளை(மே-18) மாலை 4 மணியளவில் மதுரையில் வீரகனூர் சுற்றுச்சாலை அருகே முத்துக்குமார் அரங்கத்தில் நாம் தமிழர் இயக்க மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீமான் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ‘’ நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக தொடக்கமாகிறது. தமிழர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வஞ்சிக்கிற சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு புரட்சி அமைப்பாக இது செயல்படும். இது ஒரு மாற்று அரசியல் புரட்சியை நடத்துகிற இயக்கமாக மலரும். சாதி, சமயங்களை கடந்து இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த கட்சியில் இணைய வேண்டும்.
இலங்கையில் வீரத்துடன் போராடி சதிகாரர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்து போய் இருக்கிறது. இனி தமிழன் எழவே மாட்டான் என்று சிங்களன் எக்காளமிடுகிறான். இந்திய தேசமும் இதே நினைப்பில் இருந்தது;இருக்கிறது. வீரத்தமிழினம் ஒரு போதும் வீழாது என்பதை நாங்கள் இந்த உலகத்திற்கு நிரூபித்துக்காட்டுவோம். மீண்டும்,மீண்டும் எழுவோம்.
முள்ளிவாய்க்காலில் போராடி முடித்த பல்லாயிரம் தமிழர்களை பலி கொடுத்த இந்த கருப்பு தினத்தில் நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது.
கட்சி தொடங்கும் இந்த நாளில் மதுரையில் நடக்கும் இந்த மாநாடு தமிழ் இன எழுச்சி
மாநாடாக, தமிழர் அரசியல் மாநாடாக இருக்கும். தமிழின எதிரிகளையும், தமிழர்களின் வீழ்ச்சிக்கு துணை போனவர்களையும், வீழ்ச்சிக்கு துணை போனவர்களுக்கு துணை நின்ற இனத்துரோகிகளுக்கும் எங்கள் உணர்வுகளை காட்டும் மாநாடாக இது அமையும்.
ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய மதகுரு கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலடியாக பஞ்சாப்பில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் சீக்கியர்களால் சூறையாடப்பட்டன.
தமிழன் இது போல் எந்த பொதுச்சொத்தையும் சூறையாடுவதில்லை. ஆனால் எந்த கேடும் எவருக்கும் நினைக்காத தமிழனை வீழ்த்த பல சக்திகள் சதிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் உலகஅளவில் தமிழினத்தை வளர விடக்கூடாது, அழிக்க வேண்டும் என்று எல்லா சதிகளும் நடக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஈழத்தில் நடந்த படுகொலை போர்க்குற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க இரண்டு நாள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த தமிழ்நாட்டில் காயம் பட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பெறக்கூட அனுமதியில்லை.வயதான, சுயநினைவு சரியாக இல்லாத நிலையில் சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டிருக்கிறார். எங்கே போனது மனிதநேயம்? வெட்கக்கேடு. தமிழன் என்றால் அவ்வளவு மட்டமானவர்களாய் ஆகிவிட்டோமா? தமிழர்கள் அனைவரும் குடும்பம்,குடும்பமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாநாட்டில் உலக அளவில் மலேசியாவிலிருந்து பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர்,ராமசாமி, மற்றும் உள்நாட்டில் பொதுதளத்தில் இருந்து தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கட்சியில் தமிழர் என்பது தான் முன்நிற்கும். துண்டு போடுவது, ரூபாய் கொடுப்பது, வாழ்த்தி கத்துவது,தலைவர், தொண்டர் போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் இருக்காது.
நாங்கள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும் போது தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றுவோம். அதுவரை மக்கள் இயக்கமாக, மக்களின் பிரச்சனைகளுக்காகவும், மொழி இனத்திற்கு
பாதிப்பு வந்தால் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய இயக்கமாக இருக்கும். அமைப்பு ரீதியாக உலக அளவில் செயல்படும் ஒரு கட்சியாக இருக்கும். உலகின் எல்லா நாடுகளிலும் நாம் தமிழர் இயக்கத்திற்காக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கான தலைமை இடமாக தமிழ்நாடு இருக்கும். ஒரே இனம், ஒரே மொழி என்பது தான் எங்கள் குறிக்கோள்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.