பக்கங்கள்

30 மே 2010

ஐஸ்வர்யா,ஷாருக்கான் படங்களுக்கு ஐந்து மாநிலங்களில் தடை.




இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா அடுத்த மாதம் (ஜூன்) 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழாவையொட்டி இந்திய நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தமிழ் இனத்தை படுகொலை செய்த இலங்கையில் இந்திய படவிழாவை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் திரைப்படத்துறையினர் வற்புறுத்தி வருகிறார்கள். இவ்விழாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளவர்களின் வீடுகள் முன்பும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமிதாப்பச்சன், கமலஹாசன் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. இதையடுத்து இந்த விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கமலஹாசன் அறிவித்தார். விழாவில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக அமிதாப்பச்சன் கூறினார். இதற்கிடையில் தென்னிந்திய திரைப்படத்துறையினர் மற்றும் தென்னிந்திய திரையுலகத்தினர் சென்னையில் அவசர கூட்டம் நடத்தி இதுபற்றி விவாதித்தனர். இக்கூட்டத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்றும் இவ்விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகையர் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதனால் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் ஷாருக்கானும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களிலும் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் படங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஷாருக்கான் 2 படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஐஸ்வர்யாராய் நடித்த ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்த படங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனவே மூவரும் இலங்கையில் நடக்கும் இந்திய பட விழாவை புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.