பக்கங்கள்

06 ஏப்ரல் 2014

பிள்ளையார் ஆலயக் கதவு உடைத்து கொள்ளை!

யாழ்.குடாநாட்டில் உள்ள ஆலயங்களை இலக்குவைத்து திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயத்திலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளன. ஆலயக் கேற்றை உடைத்து உள்சென்ற திருடர்கள் சுவாமி தூக்குவதற்குப் பயன்படும் வாகனங்களின் தலைகள், மற்றும் பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஆலயத்தில் வடக்கு பக்கத்தில் இருந்த கேற்றின் பூட்டை உடைத்த திருடர்கள் ஆலய வாகனசாலையின் பூட்டுக்களையும் உடைத்து உள்சென்று அங்கிருந்த குதிரை, மற்றும் யானை வாகனங்களின் தலைகளை பெயர்த்துச் சென்றுள்ளனர். கலையம்சம் பொருந்தியதாக அமைக்கப்பட்டிருந்த இந்த தலைகள் இரண்டும் வாகனத்தில் இருந்து மிகவும் நுட்பமான முறையில் பெயர்க்கப்பட்டுள்ளன.அத்துடன், மடப்பள்ளியின் கதவையும் உடைத்த திருடர்கள் அங்கிருந்த 60 செப்புச் செம்புகள், 2 குத்துவிளக்கு, 2 குடம், மற்றும் பஞ்சாராத்தி உள்ளிட்ட தீபம் காட்டுவதற்கான விளக்குகள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவ தினம் இரவு தாங்கள் அயலில் உள்ள வீட்டுக்குச் சென்ற பின்னர் நள்ளிரவு வேளையிலேயே இந்த திருட்டு இடம்பெற்றதாக ஆலய பிரதம அர்ச்சகர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் ஐயா தெரிவித்தார். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட போதிலும் இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பபடவில்லை. இந்த நிலையில் பொன்னாலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பில் பிரதேச மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.