பக்கங்கள்

07 ஏப்ரல் 2014

ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?

ஈழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும் விஜய்யும் இணைந்துள்ள படம் "கத்தி'. விநியோகஸ் தர்கள் மத்தியில் ஆர்வத் தைத் தூண்டிய இந்தப் படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்கத்தாவில் "கத்தி' ஷூட்டிங்கும் தொடங்கிவிட்ட நிலையில்... இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத் தயாரிப்பில் இணைவதாக அறிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருகிறார் என்றும் இதற்காக சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட இங்கிலாந்து தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு மாதம் 5 ஆயிரம் பவுண்டுகள் தருகிறார் என்றும் விவரங்களை அடுக்குகிறார்கள், இன உணர்வாளர்கள்.எங்கட மக்களைக் கொன்னு குவித்த ராஜபக்சேவுக்குத் துணைபோகும் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு தமிழன். அவருடைய தந்தையார் அரிசி ஆலை வைச்சிருந்தார். அவர் எங்கட மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை வலுப்படுத்த, நிதி திரட்ட பிரான்சுக்குப் போனார். போனவர் ஐரோப்பா முழுமைக்கும் தன்னோட வியாபாரத்தை விரிவுப்படுத்தினார். இனப்படுகொலைக்குப் பிறகே இலங்கைக்கு வந்தார். அரச பாதுகாப்போடு, இலங்கை அமைச்சர் சனத் ஜெயசூர்யாவோடு உலா வந்தார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களால் வாழ்வு பெற்ற ஒருவர், எங்களின் அழிவுக்குக் காரணமான ஒருவரோடு வந்தார் என்றால் அவரும் இனத்துரோகியே! பத்தாத குறைக்கு, தமிழனாகப் பிறந்து ராஜபக்சேவிற்கு ஜால்ரா அடித்து வாழும் முத்தையா முரளிதரனுக்கு பாராட்டும், பணமும் கொடுத்தவர். எங்கள் இனத்திற்கு எதிராக யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவு தருவது அல்லிராஜாவோட வேலை. இப்போ விஜய்யை வைத்து படம் தயாரிக்கிறார். பணத்திற்காக துரோகியானவரின் தயாரிப்பில் விஜய் நடிக்கக்கூடாது. அவரின் படத்தில் விஜய் நடித்தால் அவரும் துரோகியே! பணம் தான் வேண்டுமென்றால் சொல்லுங்கள்... பிச்சை எடுத்தாவது கொண்டுவந்து கொட்டுகிறோம் என விஜய்க்கும் கடிதம் எழுதியுள்ளோம். படத்திலிருந்து விலகாவிட்டால் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' என்றார் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கோயில் பூசகர், அம்பாறை நிரஞ்சன்.லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஞானம் அறக்கட்டளை மூலம் அரசு தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்துள்ளோம். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார், கவனமாக. நடிகர் விஜய் தரப்போ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

நா.ஆதித்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.