பக்கங்கள்

26 ஏப்ரல் 2014

ஆபிரிக்கர் இனி கறுப்புப் புலியாகலாம்!

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவை தலையிடுமாறு கோரிய இலங்கை அரசு தற்போது அதனைக் குழப்பும் வகையிலேயே தெரிவுக்குழு விடயத்தினை கையிலெடுத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தெரிவுக்குழுவின் மூலமே இறுதித் தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதே சுரேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி, தென்னாபிரிக்கா இலங்கை விடயத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக் கோரியதன் அடிப்படையிலேயே தென்னாபிரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டது. இதன் தொடராக அரச பிரநிதிகளும் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். இலங்கை விடயங்களைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதியால் சிறப்பு பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்வரும் மாதங்களில் அவர் இலங்கை வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தெரிவுக்குழுவின் மூலமே இறுதித்தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை, தென்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பும் ஒரு செயற்பாடாகும். கடந்த காலங்களில் வெள்ளை இனத்தவர்களை வெள்ளைப்புலி எனத் தெரிவித்து வந்த அரசாங்கம் இனிவரும் காலங்களில் கறுப்பினத்தவர்களையும் கறுப்புப் புலிகளாக அழைக்கும் எனவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எதிர்வுகூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.