பக்கங்கள்

25 ஏப்ரல் 2014

நன்றி தெரிவிக்கும் பிரேரணையை நிராகரித்த சி.வி.கே.சிவஞானம்!

தமிழ் இளைஞர் யுவதிகளைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரும் பிரேரணையை வடமாகாண சபையின் தவிசாளர் சிவஞானம் நிராகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் தினமும் இடம்பெறும் தேடுதல் சோதனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை உட்பட நான்கு பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்- கலாநிதி சர்வவேஸ்வரன்- சிவாஜிலிங்கம் ஆகியோரால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளே நிராகரிக்கப்பட்டதாக வடமாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 28ஆம் திகதி மாகாண சபை மீண்டும் கூடவுள்ள நிலையில் இந்த பிரேரணைகள் முன்மொழியப்பட்டு உறுப்பினர்களால் பேரவைச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசீலனை செய்த சிவஞானம் அந்த பிரேரணைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவாஜிலிங்கத்தால் முன்மொழியப்பட்ட ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை- சர்வேஸ்வரனால் முன்மொழியப்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்கான பிரேரணை- இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ரவிகரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை போன்றவை நிராகரிக்கப்பட்டதாகவும் அதற்கான காரணங்களை சிவஞானம் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் சில பிரேரணைகள் அரசுக்கும் இராணுவத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாது அப் பிரேரணைகளை தவிசாளர் சிவஞானம் நீக்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.