பக்கங்கள்

24 ஏப்ரல் 2014

இரணைமடு கமக்காரர் ஒன்றியம் சந்திப்பைப் புறக்கணித்தது.

இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் என்ற பெயரில் கொழும்பில் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தை கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் புறக்கணித்துள்ளது. இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்வதற்கு வடக்கு மாகாண சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் குறித்த திட்டதை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு தீவிர முனைப்புக்களை மேற்கொண்டுவருகிறது. இதன் தொடராக இன்று இரணைமடு நீர் வழங்கல் நடவடிக்கை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறும் என்றும் அதில் பங்கேற்குமாறும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், விவசாயிகள் கொழும்பு செல்வதற்கு தயாராகியிருந்த நிலையில், விவசாயிகள் என்ற பெயரில் இன்னொரு தரப்பும் கொழும்பு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்து கொண்ட இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் கொழும்புக் கூட்டத்தினைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து கிளிநொச்சி அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:- யாழ்ப்பாணம் - இரணைமடு நீர்விநியோகத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் திரு.பி.பி.ஜயசுந்தர அவர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைத் தாங்கள் செய்திருந்தீர்கள். இதில் நாமும் கலந்து கொள்ள ஆவலாய் இருந்தோம். ஆனால் திரு.சு.மனோகரன் அவர்கள் தலைமையிலான ஒரு குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளமையால் இதனை ஆட்சேபித்து இச் சந்திப்பில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளோம். எமது சம்மேளனப் பிரதிநிதிகளை கிளிநொச்சியில் வைத்து சந்தித்து கலந்துரையாடி நேரடியாக வந்து பிரச்சினைகளைக் கண்டறிந்து கொள்வதற்கு தாங்கள் ஆவன செய்து தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம். மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட திரு.சு.மனோகரனை இதில் முதன்மைப்படுத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பின் போது மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் வடமாகாண சபையின் நிபுணர்குழு அறிக்கையையும் கவனத்தில் எடுப்பதற்கும் ஆவன செய்து தருமாறும் வேண்டுகிறோம். 2014.04.21ம் திகதி யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் 2014.04.22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இரணைமடு நீர் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான திட்டம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தும் திட்டமிட்டே அது குறித்துஆராயப்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பினை அவசியம் ஏற்படுத்தித் தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம் என்று அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.