பக்கங்கள்

13 ஏப்ரல் 2014

மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!

இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு மட்டுமே ஒவ்வொரு தமிழனிடமும் எஞ்சி இருக்க முடியும். கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், ஆதாரமற்ற வகையிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகளாக ஆக்கப்படும் தமிழ்ப் பெண்களது மரணங்கள், கலாச்சாரச் சீரழிவு ஊக்குவிப்பு, போதைப் பொருள் விநியோகம், அச்சுறுத்தல்கள், கட்டாய கருக்கலைப்புக்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நிலப் பறிப்புக்கள் என அத்தனை கொடூரங்களும் ஈழத் தமிழர்கள்மீது நடாத்தப்படுகின்றன. அதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்கள்மீது விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டுக்களும், கைதுகளும், துப்பாக்கிச் சூடுகளும், மரணங்களும் நடாத்தப்படுகின்றன. ஆனாலும், உலகின் எந்தத் திசையிலிருந்தும் அதற்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல், அத்தனையும் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சிங்கள தேசம் அடக்கி வைத்துள்ளது. விரிந்து செல்லப்போகும் தமிழின அழிப்புக்கு முன்னெச்சரிக்கையாக, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்மீதும், அதன் செயற்பாட்டாளர்கள்மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய, சிங்கள அரச தரப்புச் செய்திகளின்படி, விடுதலைப் புலிகள் அமைபைச் செர்ந்த மூவர் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள்தானா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தமிழர்களது இன்றைய நிலையில் சாத்தியப்படாத விடயம். ஆனாலும், அவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பதனால், அவர்கள் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏதோ வகையில் இடைஞ்சலாக இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டுள்ள தமிழர் தாயக பிரதேசத்தில் ஒரு ஆயுத போராட்டமோ, விடுதலைப் புலிகளது மீள் எழுச்சியோ சாத்தியமானது அல்ல. சிங்கள ஆட்சியாளர்களோ, அவர்களது படையினரோ தெரிவித்துவரும் கதைகளும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களும், படுகொலைகளும் இன்னொரு செய்தியை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்த முயல்கின்றது. அதாவது, சிங்கள தேசத்தின்மீது நீதி விசாரணை என்ற கோரிக்கையூடாக அழுத்தங்கள் கொடுக்க முற்பட்டால், ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் செல்லைக் கவசமாக்கி, எஞ்சியுள்ள உணர்வுள்ள தமிழர்களையும் அழித்து விடுவோம் என்பதுதான் அந்தச் செய்தி. காணாமல் போன தனது மகனைத் தேடி, போராட்டம் நடாத்திய ஒரு தாயின் போராட்டமும், ஒரு தங்கையின் கண்ணீரும் சர்வதேச கவனத்தை ஈர்த்தபோது, விடுதலைப் புலிகள் மீண்டும் சிங்களப் படைகளால் களத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். கோபி, அப்பன், தேவியன் என்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளது புதிய தலைவர் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட கோபி கைது செய்யப்பட்டதாக சிங்களப் படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மூவரும் இராணுவத்தின் தேடுதல், சுற்றிவளைப்பின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தற்போது அறிவித்துள்ளது. ஒரு குறுகிய பிரதேசத்தில், பல ஆயிரம் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற சிங்கள அரசின் கூற்று நம்பும்படியாக அமையவில்லை. சர்வதேச நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு, போர்க் குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா அரசுக்கு விடுதலைப் புலிகளது மீள் எழுச்சி என்பது, அவர்களது நிலைக்கு ஆதரவான பலமான செய்தி. அதற்குக் காரணமானவர்களில் ஒருவரையாவது உயிரோடு பிடித்திருந்தால், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு இலகுவான ஆயுதமாகியிருக்கும். அதை விடுத்து, அவர்கள் அவசியமற்ற வகையில், போலிக் காரணங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவே, சிங்கள அரசின்மீதான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது. தன்மீது ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள போர்க் குற்ற விசாரணையைக் குழப்பும் நோக்கத்துடனும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுக்கும் விதமான அச்சுறுத்தலுக்கும் இந்த ஓரங்க நாடகமும், கைதுகளும், தடுப்புக்களும், படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதையும் மீறி, தமிழர்கள் ஐ.நா. நோக்கி வாய் திறக்க முற்பட்டால், இதையும்விடப் பூதாகரமான காட்சிகள் அரங்கேற்றப்படும். தெற்கே, சில குண்டு வெடிப்புக்களும், அதில் சில அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களும்கூட எதிர்பார்க்கப்படலாம். அதனைத் தொடர்ந்து பாரிய படை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம். 2009 மே மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் காலத்தில், தமிழீழ மண்ணில் ஒரு இன அழிப்புப் போர் நிகழத்தப்பட்டது. ஐந்து வருடங்களின் பின்னரான, 2014 மே மாதத்தில் மீண்டும் ஒரு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாட்களில், ஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலை நிகழத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதனை, ஜெனிவாவில் அமெரிக்காவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய காங்கிரஸ் அரசு எதிர்த்தபோதே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

- கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.