தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன் வைத்த தீர்மானமான மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்துமுன் புகையிலைக்கான தடையை அமுல்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.இன்றைக்கு பலவித போதைப் பொருட்களை எமது தேசத்தினுள் புகுத்தியுள்ள இந்த அரசானது தமிழ் மக்களது குறிப்பாக விவசாயிகளது பொருளாதாரத்தையும் சிதைக்கும் பல முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை முறியடிக்கும் விதமாக,இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல விடையங்களை கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஊடாக நிறைவேற்ற பாடுபடுவார் என்ற நம்பிக்கையை அவரது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.எந்த ஒரு பதவியில் இல்லாதபோதும் மக்கள் நலப்பணிகளை தமது சொந்த செலவில் ஆற்றி வந்தவர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது.அவர் கொண்டு வந்த தீர்மானம் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக்கும்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
07 ஏப்ரல் 2018
கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பொருத்தமான நேரத்தில் கொண்டுவந்த தீர்மானம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன் வைத்த தீர்மானமான மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்துமுன் புகையிலைக்கான தடையை அமுல்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.இன்றைக்கு பலவித போதைப் பொருட்களை எமது தேசத்தினுள் புகுத்தியுள்ள இந்த அரசானது தமிழ் மக்களது குறிப்பாக விவசாயிகளது பொருளாதாரத்தையும் சிதைக்கும் பல முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை முறியடிக்கும் விதமாக,இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல விடையங்களை கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஊடாக நிறைவேற்ற பாடுபடுவார் என்ற நம்பிக்கையை அவரது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.எந்த ஒரு பதவியில் இல்லாதபோதும் மக்கள் நலப்பணிகளை தமது சொந்த செலவில் ஆற்றி வந்தவர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது.அவர் கொண்டு வந்த தீர்மானம் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக்கும்.02 ஏப்ரல் 2018
கல்முனையின் உதவி மேயராக கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் தெரிவு!
கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. அதில் புதிய மேயர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹென்றி மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு பிரேரிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 31 வாக்களித்தனர். 22 பேர் றகீப்புக்கும், ஹென்றி மகேந்திரனுக்கு 7 பேரும் வாக்களித்தனர். இருவர் வாக்களிக்கவில்லை. வாக்குகளின் அடிப்படையில் புதிய மேயராக எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டார்.
உப மேயராக மூவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கந்தசாமி சிவலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஜி.எம்.முகித், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் காத்தமுத்து கணேஸ் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அதில் காத்தமுத்து கணேஸ் 15 வாக்குகளைப் பெற்று பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய இருவரும் தலா 7 வாக்குகள் பெற்றுக் கொண்டனர்.01 ஏப்ரல் 2018
கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணக்கம்!
கரவெட்டி மற்றும் வவுனியா வடக்குப் பிரதேச சபைகளில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும் என்று கூறப்படுகிறது.‘தமிழர் மண்ணில் பேரினவாத கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அவ்வாறான சூழல் ஏதாவது சபைகளில் உருவானால் அந்த இடத்தில் தமிழர்கள் ஆட்சி அமைப்பதற்கே ஆதரவளிப்போம். அது ஒருவேளை கூட்டமைப்பாக இருந்தாலும் தமிழ்த் தேசத்தின் நலன் கருதி ஆதரவளிப்போம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தின் கரவெட்டி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 9 ஆசனங்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தலா 7 ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 3 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2 ஆசனங்களும் உள்ளது. கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்றது. ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களையும் நடத்தி வருகின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்குப் பிரதேச சபையின் 26 ஆசனங்களில், 12 ஆசனங்கள் சிங்கள உறுப்பினர்களுடையது. எஞ்சிய 14 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தலா 3 ஆசனங்களும் உள்ளன.இவ்வாறானதொரு நிலையிலேயே, தெற்கு கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.30 மார்ச் 2018
கட்சிக் கொள்கைகளை மீறியவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
திருக்கோவில் பிரதேச சபை தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கட்சி கொள்கைகளை மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் , சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் வாக்களித்ததால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அக் கட்சி தீர்மானித்துள்ளது.
தென் தமிழீழம். திருக்கோவில் பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை கொண்ட முதலாவது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ஒட்டுக்குழு ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
தலைமை பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமையினால் 16 உறுப்பினர்களது சம்மதத்துடன் திறந்த வாக்கெடுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவ் திறந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான இராசையா வில்ஷன் கமலராஜன் 09 வாக்குகளும் விவேகானத்தராசா புவிதராஜன் 07 வாக்குகளும் பெற்று 02 வாக்குகள் வித்தியாசத்தில் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்படடர். இவ் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தார் அதே போல் உபதலைவர் தெரிவிற்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான சின்னதம்பி விக்னேஸ்வரனுக்கு அதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வாக்களித்திருந்தார். இதனால் கட்சி கொள்கைகளை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செயற்பட்டதால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை அக் கடசியினர் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
27 மார்ச் 2018
மக்களை அபாய நிலைக்குள் தள்ளியுள்ள த.தே.கூட்டமைப்பின் கூட்டு!
ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய அமைப்பாளருமான வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டு வருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் முதல்வர் தெரிவில் நாம் போட்டியிட்டிருந்தோம். நாம் முன்னெடுத்து வந்த கொள்கை வழியிலான பதவிகளுக்கு சோரம் போகாத அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின் சபைகளில் ஆட்சியமைப்பதில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும் அவர்களின் ஆதரவினைக் கோரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டினையும் கடைப்பிடித்து வந்திருந்தோம்.
அந்த வகையில் தமிழினத்தை மாறி மாறி இனவழிப்பு செய்த சிங்கள பேரினவாத கட்சிகளுடனும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களுடனும் பதவிகளுக்காக கூட்டிணைந்து நாம் கூட்டமைப்பு பற்றி கூறிவரும் கருத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபித்துள்ளனர்.
இன்று தமிழ் தேசியவாதிகள் ஒருபுறமாகவும் தமிழின விரோதிகள் மறுபுறமாகவும் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது.
எத்தனை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றுதிரண்டாலும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியப் பற்றுறுதியுடன் எமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதோடு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அயராது உழைப்போம். அதற்காக நாம் எமக்குக் கிடைத்த அரசியல் களங்களைப் பயன்படுத்துவோம் என்பதனை இந்த நேரத்தில் எமது பாசத்திற்குரிய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் கள யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு தமிழர் விரோத சக்திகளிடமிருந்து எம்மினத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து மக்களும் எமது அரசியல் இயக்கத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு உரிமையோடு வேண்டிக்கொள்கின்றோம்.26 மார்ச் 2018
யாழ்,மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு!
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில்..
💥 ஆட்சியமைக்க ஆதரவளித்தவர்கள்: 18
1. தமிழரசுக்கட்சி – 16
2. சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
♦️ஈபிடிபிக்கு ஆதரவளித்தவர்கள்: 13
1. ஈழ மக்கள் சனநாயக கட்சி – 10
2. ஐக்கிய தேசிய கட்சி – 03
♦️தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளித்தவர்கள்: 13 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 13
இறுதியில் தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் சனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதிய அரசை நிறுவுகின்றது. முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாவது தடவையாக இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார். இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது. இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார். ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர். இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது. இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 மார்ச் 2018
ஜெனிவா சந்திப்புக்கள் குறித்து செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய செவ்வி!
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் தாரகம் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியை நாம் பிரதி பண்ணி வெளியிடுகின்றோம்.நன்றி:தாரகம் இணையம்
24 மார்ச் 2018
உள்ளூராட்சி சபைகளை நடத்த ஒத்துழைப்பு வேண்டும் என்கிறார் சிவஞானம்!
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும் என்று வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுதினம் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி நிர்வாகத்தை உள்ளூர் விடயம் என்பதால் அதற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு, சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினர்களும் செயற்படுவதே இன்றைய தேவையாக இருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமான நிலையில் கொண்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புரிந்துணர்வுகள் இடம்பெற வேண்டும். ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் சிறந்த நிர்வாகமாக திகழ வேண்டும். அந்தந்த கட்சிகள் தமது தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகவும், சுமூகமான சூழுலை உருவாக்க வேண்டும். முரண்பட்டுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்க முடியாது.
தனிப்பெரும்பான்மை பெற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும், முழுமையான ஆதரவை ஏனையோருக்கு வழங்கியும், கலந்துபேசியும், சிக்கலில்லாத நிர்வாகத்தை வடமாகாணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.21 மார்ச் 2018
வெவ்வேறு கட்சிகளில் வெற்றி பெற்ற புளியங்கூடல் மைந்தர்கள் மூவர்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தமது உறுப்பினர் பதவிகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டவர்களில் மூவர் புளியங்கூடல் மண்ணின் மைந்தர்கள் என்பது புளியங்கூடலுக்கு பெருமை மிகு சிறப்பு அம்சமாகும்.வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு இருந்தாலும்,கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் இவர்களின் வெற்றி புளியங்கூடல் மக்களின் அரசியல் முன்னேற்றத்தை கோடிட்டு காட்டுகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார்.தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு சிவலிங்கம் அசோக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு சிவகடாட்சம் சிவநேசன்(ரூபன்)வெற்றி பெற்றிருக்கிறார்.இவர்களது அரசியல் பயணம் இனிதே தொடர புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.





ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி மைத்திரிக்கு முதல்வர் கடிதம்!
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதி, ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி வட மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி, கடந்த வாரம் உடல்நலக் குறைவினால் மரணமானார்.இதையடுத்து, அவர்களின் இரண்டு குழந்தைகளும் பெற்றோரின்றித் தவிக்கும் நிலையிலேயே கருணை அடிப்படையில் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
அதேவேளை, ஆனந்தசுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியை வலியுறுத்துமாறு கோரி, ஆனந்தசுதாகரனின் உறவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் அழைப்பினையடுத்து முதலமைச்சரை சந்தித்த ஆனந்தசுதாகரனின் உறவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இதன்போது, ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தந்தையை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் உறவினர், முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இதனையடுத்து, ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் தானும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அதன் பிரதியை உறவினரிடம் வழங்கியுள்ளதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்குக்காக குறுகிய நேர விடுப்பில் வந்த ஆனந்த சுதாகரனுடன் சிறைக்கு அவரது மகள் செல்ல முற்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தமை குறிப்பிடத்தக்கது.20 மார்ச் 2018
முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய ஐயா நடராஜனின் இழப்பு பேரிழப்பு-சீமான்!
ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். நடராஜனின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் ஏற்பட்டுள்ளது. அரசியல் களத்தில் அவர் ஆற்றிய பணிகளும் வரலாற்றில் முக்கியமானது.ஐயா நடராசன் அவர்கள் அரசியல், இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்களங்களில் பணியாற்றி தனி முத்திரைப் பதித்தவர். ‘புதிய பார்வை', ‘தமிழரசி' போன்றப் பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தி இதழியல் உலகில் தனக்கெனப் பெருமைக்குரிய இடத்தை அடைந்தவர். மேலும், தமிழரசி அறக்கட்டளை என்றவொன்றினை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பலசெய்து, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் ஐயா நடராசன் தஞ்சாவூரில் நடத்தும் ‘தைத்திருவிழா' நிகழ்வு மிகச் சிறப்பான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற பெருநிகழ்ச்சியாகும்.தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009ம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்' அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும்.எப்போதும் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்த ஐயா நடராசன் அவர்களின் இழப்பினை எனது தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஐயா ம.நடராசன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்பான ஐயா முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவின் துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கேற்று, ஐயாவுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். புலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை:அமைதிப்படை அதிகாரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார். 1987-89 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழு அண்மையில் இலங்கை சென்று திரும்பியது. அப்போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளுக்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா கூறியதாவது: அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன். திருவனந்தபுரம், சூலூர் விமான படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணித்திருக்கிறேன். வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆபரேஷன் பூமாலையும் நினைவில் இருக்கிறது. இவ்வாறு உன்னி கார்தா கூறினார்.17 மார்ச் 2018
தேசியத் தலைவரை படைவீரராக்கியது கூகிள்!
கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை இப்பொழுது படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.
பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. அதையும் மீறி தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடுவார்கள்.
இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனை Share செய்வதன் மூலம் அனைவருக்கும் உடனடியாக இந்த வெற்றியை தெரியப்படுத்துங்கள்.நன்றி:அதிர்வு
கனடாவில் புத்தர் சிலைக்கு நேர்ந்த அவலம்!
16 மார்ச் 2018
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களுக்கான தீர்மானங்கள் இல்லை!
ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.' இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது. உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த தீர்மானங்கள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.15 மார்ச் 2018
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கையளியுங்கள்!ஐ.நா.வில் கஜேந்திரகுமார்!
இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று கோரிக்கை விடுத்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.'இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சிங்கள பௌத்த இனவாதக் குழுக்களினால் முஸ்லிம் சமூகம் கடந்த இரு வாரமாக திட்டமிட்ட ஒழுங்குமுறையில் இலக்குவைக்கப்பட்டுவந்திருப்பதை இந்தக் கவுன்சில் அறிந்துள்ளது. மே 2009 இல் யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து இதே போன்ற குற்றங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து இழைக்கப்பட்டே வருகின்றது. முஸ்லீம் சமூகத்தை நிதி ரீதியில் வெட்டியொதுக்கும் இலக்கோடு இயங்கும் சூத்திரதாரிகள் அதனை ஒப்பேற்றும்வரை எதயும் செய்யாதிருத்தல், இல்லது சிறிதளவே நடவடிக்கையெடுத்தல் என்ற போக்கையே இதுவரை இருந்த அரசுகள் பின்பற்றிவந்துள்ளன.தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தம் முடிவடைந்த கையோடு இவ்வாறு முஸ்லீம்கள் ஒழுங்குமுறையாக இலக்குவைக்கப்படுகின்றமையை இலங்கைத் தேசம் தன்னைத் தனித்து சிங்கள பௌத்த பேரினவாத நாடாக நிலை மாறும் கொள்கைப்போக்காகவே அர்த்தப்படுத்த முடியும். தமிழர்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட சர்வதேச மனிதஉரிமைகள் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் உரியமுறையில் கவனம் செலுத்துவதற்கு இந்த (மனித உரிமைகள்) கவுன்சில் உட்பட்ட சர்வதேச சமூகம் – தவறியமையே மேற்படி பௌத்த சிங்கள பேரினவாத தேசமாக தன்னை நிலைமாற்றும் இலங்கையின் செயற்போக்கான துணிச்சலைத் தருகின்றது.இந்தநிலமையின் விளைவாகவே இவ்வாறு முஸ்லீம்களும் இலக்குவைக்கப்படுகின்றார்கள். ஆகவே இந்தப் பின்புலத்தில் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள் அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு அனுப்புங்கள் இதனிலும் குறைந்த எந்த நடவடிக்கை மூலமும் (இலங்கையில் தொடரும்) குற்ற விலக்களிப்பு (கொடூரத்தை) முறைமையை நிறுத்தச் செய்ய முடியாது என்றார்.11 மார்ச் 2018
மெலிஞ்சிமுனை அந்தோனியார் ஆலய உணவில் நஞ்சு!
ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98பேர் ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்,போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று சனிக்கிழமை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரு பகுதியினரால் உணவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.இவ்வுணவில் வேண்டுமென்றே நஞ்சூட்டப்பட்டதா அல்லது தவறுதலாக நஞ்சு கலந்ததா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.தொடர் வாந்தி,வயிற்றோட்டம் என்பனவால் சிலரது உடல் நிலை ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவமனையை ஆதாரம் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.28 பிப்ரவரி 2018
ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!
சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை முன்கூட்டியே சாத்தப்பட்டுள்ளது.அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.26 பிப்ரவரி 2018
தமிழரசுக் கட்சியில் இருந்து அனந்தி,சிவகரன் நீக்கம்!
வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவது என்று அந்தக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முந்தினம் நடைபெற்றது. ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் அதில் முன்மொழியப்பட்டுள்ளது.சிவகரனை மாத்திரம் இப்போது நீக்கலாம். அனந்தி சசிதரன் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை அப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாயின் இருவருக்கும் எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இறுதியில் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவது என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் எடுத்த பின்னர் அதனை மீறி இவர்கள் இருவரும் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
25 பிப்ரவரி 2018
சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக தமிழ் மக்கள் போராட்டம்!
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுவிட்ஸ்லாந்தின் பேர்ன் நகரில் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய வாழ் ஏராளமான புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்..jpg)
22 பிப்ரவரி 2018
புகலிடம் கோரியவரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!
இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட 18 பிப்ரவரி 2018
அமைச்சுப் பதவி புரளி என்கிறார் டக்ளஸ்!
மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் கூறினார்.இதேவேளை யாழ். மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளூராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டக்ளஸ்தேவானந்தா பல சபைகளில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களின் அடிப்படையில் மக்களின் நலன் அடிப்படையில வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என தான் கூறியதாக தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தமை கூட்டமைப்புடன் இணைவது அல்லது கூட்டமைப்பை ஆதரிப்பது என்ற பொருள்படாது எனக் கூறிய அவர், மக்களின் நலன் அடிப்படையில் சபைகளின் இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமை என்ற முனைப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
எனினும் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மாநகரசபையில் ஆட்சியுரிமை கோரவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கட்சியினுள் விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். குறிப்பாக கூட்டமைப்பினர் ஆனோல்டை மேயராக்க முனைவதனை தமது கட்சியின் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை என்ற நிலையில் தமது உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிப்பதா? அல்லது கட்சி எடுக்கும் தீரமானத்திற்கு கட்டுப்படுவதா என்ற முடிவுக்கு வரவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றில் தடுக்கி விழுந்தார் மகிந்த!
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.இந்த நிகழ்வில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். இதன்போது நீதிமன்ற வாசற்படியில் கால்வைத்து ஏறிய போது மகிந்த ராஜபக்ச, கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழப்போனார். அப்போது அருகில் இருந்த அவரது உதவியாளர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதால் நிலத்தில் அடிபடாமல் காப்பாற்றப்பட்டார்.16 பிப்ரவரி 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை!
16-02-2018
ஊடக அறிக்கை
நன்றி நவிலல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஊடக அறிக்கை
நன்றி நவிலல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
14 பிப்ரவரி 2018
மக்களுடன் மாத்திரமே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு-காண்டீபன்!
தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பொதுக்கொள்கை ஒன்றை வகுத்து தனிக்கட்சியாக செயற்பட வேண்டும் என வெளியான செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர முடியாது என்றும், மக்களோடு மாத்திரமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டுச்சேரும் என்றும் காண்டீபன் குறிப்பிட்டார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏமாற்றி கொள்கைகளையும் கைவிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டு என்ற பெயரில் சேர்த்துக்கொள்வது மக்கள் ஆணைக்கு செய்யப்படும் துரோகமாகும். வரலாற்று ரீதியாக தவறிழைத்த கட்சித் தலைவர்கள் இன்றும் பதவிக்காக ”கூட்டு“ என்ற பெயரிலும், பொதுக்கொள்கை என்ற அடிப்படையிலும் ஒன்றுசேர நினைப்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் முன்னணிக்கு அளித்த வாக்குகளுக்கும், மக்கள் ஆணைக்கும் ஒருபோதும் துரோகமிழைக்காது.
நீண்டகாலமாக தேசியத்திற்காக போராடி தேர்தல்கள் பலவற்றில் தோல்வியைக்கண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் தற்போது அடையாளம் கண்டு, வாக்களித்துள்ளனர். சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் தேசியத்தை விலைபேசிய ஏனைய கட்சிகள் பொதுக் கொள்கை என்ற போர்வையில் குளிர்காய்ந்து மீண்டும் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுவதை ஏற்கமுடியாது.
தமிழ் தேசியத்தை நிலைநாட்டி தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்த நினைக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள் விரும்பினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக பொதுக்கொள்கை அடிப்படையிலும், பொதுச் சின்னமொன்றிலும் புதிய கட்சியாக பதிவுசெய்து செயற்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது.
இளைஞர்களையும் அதாவது, புதிய இரத்தங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்து தேசியத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் காண்டீபன் கூறினார்.வடக்கு முதல்வருடன் முன்னணியினர் சந்திப்பு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது.12 பிப்ரவரி 2018
முன்னணியின் எழுச்சியையும் கூட்டமைப்பின் வீழ்ச்சியையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% வீதத்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%வீதத்தினையும் பெற்றது. வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியக்கட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 6வது இடத்தையும் பெற்றன.
மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை எதிர்கொள்ளவில்லை. உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளது.
ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்.
மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே.
இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள்.10 பிப்ரவரி 2018
கொள்கை வென்றது!புளியங்கூடலில் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றி!
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உந்து உருளி(சைக்கிள்)சின்னத்தில் போட்டியிட்ட கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றியீட்டியுள்ளார்.அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் பெரும் மகிழ்வில் திளைத்துள்ளனர்.புளியங்கூடல் மண் விழாக்கோலம் பூண்டுள்ளது,வெடிச்சத்தங்கள் முழங்க இளைஞர்கள் பவனி வந்துகொண்டு இருக்கின்றார்கள்.ஞானேஸ்வரனின் வெற்றியானது அவரதும் அவர் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினதும் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.சமூக சேவையாளரான ஞானேஸ்வரன் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் தனது கடமையை சரிவர ஆற்றுவார் என்ற நம்பிக்கை அவரது தொகுதி மக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது.பண பலம் இல்லை கொள்கையே முக்கியம் தன்மானமே முக்கியம் என்பதை புளியங்கூடல் மக்கள் தமது வாக்குகளால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.இந்த தருணத்தில் புளியங்கூடல் மக்களுக்கு புளியங்கூடல்.கொம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.அங்கிருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்கிய செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றிகள்.உந்து ஊர்தியில்(சைக்கிள்)கேட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.உரிமைக்கான போராட்டம் தொடரும் மக்கள் சக்தியோடு.09 பிப்ரவரி 2018
சுவிசில் இலங்கை இளைஞர் அடித்துக் கொலை!
சுவிட்சர்லாந்தில் 19 வயதுடைய இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் உள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமில் கடந்த புதன்கிழமை காலை 9.25 மணியளவில், இந்தச்சம்பவம் இடம்பெற்றது.
அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.07 பிப்ரவரி 2018
இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுக்கு வருகின்றன!
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களுக்கான, சிறுசிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், ஒலிபெருக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலமான பிரசாரம் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
இம்முறை வாக்களிப்புகள், 13, 400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன. இத்தேர்தலின் ஊடாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக, இம்முறை மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். பதிவு செய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 57,252 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2017ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15,760,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.04 பிப்ரவரி 2018
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!
இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று 339ஆவது நாளாகவும் தொடர்கிறது. போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.
சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார்.
அவரது போராட்டம் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்மையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் முன்னெடுத்தார்.
இதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” எனத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையிலேயே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்றும் இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்..jpg)
02 பிப்ரவரி 2018
பிடல் காஷ்ரோவின் மகன் தற்கொலை!
கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த பல மாதங்களாக மன அழுத்த சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை (வெள்ளிக்கிழமை), கியூபாவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 68. அண்மையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு திரும்பியபோதும் அவர் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினரால் முடிவு செய்யப்படும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை என்றும் உள்நாட்டு ஊடங்கள் கூறுகின்றன.01 பிப்ரவரி 2018
'ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு'அடித்து சொல்கிறார் ரணில்!
நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. ஆனால், ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.“ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை. ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டும்.அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாம்” என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.31 ஜனவரி 2018
கோயிலில் பிரச்சாரம் உந்து உருளிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஆலய குருக்கள்மாருக்கும் எதிராக வலிவடக்கு பிரேதேச சபையின்
முன்னாள் தவிசாளரும், தற்போது
20ஆம் வட்டாரம் மல்லாகம் பகுதிக்கான வேட்பாளருமான
சோ.சுகிர்தன் அவர்களால் அரசியல்க் காழ்ப்புணர்ச்சியுடன்
இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கு கௌரவ மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா,சுபாஷ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி,சுகாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்மோடு கூட இருந்து எம்மை வழிப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனிற்கு நன்றிகள்.
எம்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டமையை கேள்வியுற்ற நொடிப்பொழுது முதல் நல்ல தீர்ப்பு வரும்வரை எமக்காக இறைவனைப் பிரார்த்தித்த நல்லுள்ளங்களிற்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பிலும்,தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைப் பகிர்கின்றேன்.
மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விதிமுறையினை மீறியவகையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு வேட்பாளர் சோ.சுகிர்தன் அவர்கள் பெலீசாரிடம் சமர்ப்பித்த புகைப்படங்களை இத்தால் வெளிப்படுத்துகின்றேன்.
ஆலய வழிபாட்டினை கொச்சைப்படுத்திய நயவஞ்சகர்களுக்கு சரியான பாடம் புகட்ட அணிதிரள்வோம்.
மாற்றத்திற்காய் வாக்குகளை வழங்கி எதிர்கால சந்ததி நிம்மதியாய் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டுவோம்.இவ்வாறு தாயுமானவர் நிகேதனின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஜனவரி 2018
புலித்தேவனின் சகோதரர் பாலதயாகரன் மாரடைப்பினால் மரணம்!
தமிழீழ சமாதான செயலகப் பொறுப்பாளராக விளங்கிய புலித்தேவன் அவர்களின் சகோதரர் இன்று மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்,தும்பளை
சிவப்பிரகாசா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராக கடமையாற்றி வந்த சீவரெத்தினம் பாலதயாகரன் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகவும் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
26 ஜனவரி 2018
உந்து உருளிப் பக்கம் மக்கள் பார்வை திரும்பியதால் பெரும் அச்சத்தில் பிற கட்சிகள்!
நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை மக்கள் பார்வை அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் உந்து உருளிப் பக்கம் திரும்பியுள்ளதால் பிற கட்சிகள் மிகவும் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் வாக்குகளில் பதவிக்கு வந்தவர்கள் சிங்கள அரசின் கைப்பொம்மையாக மாறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேவை மக்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பிற கட்சியினர் தோல்வி பயத்தில் இருப்பதோடு உந்து உருளி சின்னத்தில் போட்டியிடுபவர்களை எப்படி ஓரம் கட்டலாம் என பல வழிகளிலும் சிந்தித்து குழப்பத்தில் மூழ்கியிருப்பதாக அறிய முடிகிறது.தமக்கிருக்கும் அரச பலத்தை பயன் படுத்தி பொய்க்குற்றச் சாட்டுகளில் உந்து உருளி சின்ன வேட்பாளர்களை சிறைக்குள் தள்ளப்போவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.மக்களின் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அம்மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்கள் அவர்களுக்கு அளிக்கும் வரவேற்பின் மூலம் காண முடிகின்றது.இது வெறும் வீதி திருத்தத்திற்கான தேர்தல் இல்லை தமிழ் மக்களின் விதியை தீர்மானிக்கும் போர் என்பதை ஒவ்வொரு தன்மானத் தமிழனும் உணர்ந்திருக்கிறான் என்பது உண்மை.பேரமற்ற நேர்மையான அரசியலுக்கு உந்து உருளிக்கு வாக்களிப்போம்,உரிமைகளை வென்றெடுக்க ஓங்கிக் குரல் கொடுப்போம்.24 ஜனவரி 2018
காணாமல் போனோரை புலிகள்தான் கடத்தினார்கள் என்று சுமந்திரன் சொல்ல வருகிறாரோ?
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மூலமாகவே காணாமல் போனோருக்கு ஒரு தீர்வு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச விசாரணைகள் நடைபெறுவதற்கு இந்த சட்டத்தில் இடமிருக்கின்றது.
இதில் செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
எனினும், காணாமல் போனோர் விடயத்திலும், சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் விடயத்தில் “இராணுவத்திடம் எமது உறவுகளை கையளித்தோம்.” என்று வடக்கில் உள்ளவர்கள் கூறும் போது, “இராணுவத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்கப்போகின்றார்கள்” என்ற கருத்து தெற்கில் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் தான் படித்ததாக ஒரு கருத்தையும் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.அதில் “இறுதி யுத்தத்தில் தனது மகளை விடுதலைப்புலிகள் கொண்டு போய்விட்டார்கள்.” என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தாயே தனது மகளை விடுதலைப்புலிகள்தான் கொண்டு சென்றார்கள் என கூறுகின்றார்.
ஆகவே விடுதலைப்புலிகள் கொண்டு சென்றவர்களில் அனைவருமே உயிருடன் வரவில்லை. ஆகவே காணாமல் போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
இராணுவத்தினர் கொண்டு சென்றவர்கள் மட்டுமல்லாது வேறு விதத்திலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஒரு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.22 ஜனவரி 2018
சம்பந்தன் முடியாவிட்டால் விட்டுப்போ-கஜேந்திரகுமார் ஆக்ரோஷம்!
நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தெரிவித்துள்ளார்.வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப்பேரவையின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரையொன்றை ஆற்றியுள்ளார். அவர் தனது உரையில், “எமது விடுதலை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலக்குக்கு கொண்டுச் சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்புக்கும் அது பெரும் சவாலாகவே இருந்தது.ஆயுதப் போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளுக்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களுக்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும்.
இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல. அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். உயிர்போனாலும் பரவாயில்லை சரணடையாது இப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல.
சம்பந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ. வேறு யாரும் வருவார்கள். நாங்கள் வருவோம் எங்களுக்கென்று ஓர் அணுகுமுறை உள்ளது. நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் எங்களிடம் இருக்கின்றது.முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உனது பாதையென்றால் நீ போ. இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்” என்றார்.21 ஜனவரி 2018
நாளை தபால் மூல வாக்களிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளை, 22 ஆம் திகதி, காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும். ஏனைய அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும். இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.18 ஜனவரி 2018
எம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடி 11ம் திகதி-மணிவண்ணன்!
தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்கள அதிகாரிகளே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாரோ ஒரு தரப்பு தோற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே அரச இயந்திரம் எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் வென்று கொண்டிருந்த ஒரு தரப்பு அரசுக்குத் தேவையான தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்துக்குக் கூட தடை விதிக்கப்பட்டது.
அரச இயந்திரத்தையும் பொலிஸாரையும் கொண்டு சட்டத்தை மீறாத எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்தி நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட்டு நீதிமன்றங்களிலே காலத்தைச் செலுத்த வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற ரத்னஜீவன் எச்.ஹூல் என்பவர் இதுவரை முறைப்பாடு செய்த ஒரே கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். அவருடைய முழுநேரப் பணி எங்களுடைய கட்சி என்ன செய்கின்றது, அதனை எவ்வாறு தடுக்கவேண்டும் என்பதுதான்.
எங்கள் மீது பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள் என்றார்.17 ஜனவரி 2018
சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து செய்தி ஏமாற்று வித்தை-கஜேந்திரகுமார்!
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம் என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, இறையாண்மை போன்றவற்றினடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என கூறியிருந்தது. மேலும் இவற்றுக்கு எதிராக ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் இன்று இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக மாறி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து வடகிழக்கு இணைப்பை மறந்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது.
அதற்கு மேலாக தாம் இணங்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என மக்கள் மத்தியில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உள்ளக சுயநிர்ணய உரிமை எனவும், சுயாட்சி எனவும், இறைமை மதிக்கப்பட்டு எனவும் கூறுவதை நகைப்புக்குரிய ஒரு கருத்து என கூறுவதில் தவறு எதுவும் இருக்காது. மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதே ஒரு மோசமான விடயம்.இருந்தும் ஒரு பேச்சுக்கு உள்ளக சுயநிர்ணயம் என சொன்னால் இடைக்கால அறிக்கையில் இறைமை பகிரப்பட முடியாதது என கூறப்பட்டுள்ளது. சமஷ்டி இல்லை என்கிறது இடைக்கால அறிக்கை. இந்த லட்சணத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை, இது மதிக்கப்படல், சுயாட்சி என்பனற்றை இரா.சம்மந்தன் எங்கே எடுக்கப்போகிறார்? ஆக மொத்தத்தில் சம்மந்தனின் இந்த உரை நகைப்புக்குரியது. நொந்துபோய் கிடக்கும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியை நெரிக்கும் வகையிலான ஒரு கருத்தாகும் என்றார்.13 ஜனவரி 2018
யாழில் மண்பானை விற்பனை இம்முறை அதிகரிக்கும் என நம்பிக்கை!
![]() |
| யாழ்ப்பாணம் |
09 ஜனவரி 2018
தேர்தல் களம் நோக்கி புளியங்கூடல் மண்ணின் மைந்தன்!
புளியங்கூடல் மண்ணின் மைந்தனும் சமூக சேவையாளருமாகிய கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.சொந்த ஊரான புளியங்கூடலின் 8ம் வட்டாரம் ஜே/59 ஜே/60 பிரிவில் முதன்மை வேட்பாளராக களம் இறங்குகிறார் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள்.கொள்கைப்பற்றோடும் தேசிய உணர்வோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சியும் தமிழ் மக்களின் நம்பிக்கையின் சின்னமுமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடு இணைந்து பயணித்து வரும் ஞானேஸ்வரன் அவர்கள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சின்னமான உந்து உருளி சின்னத்தில் தமிழ்த்தேசிய பேரவையின் கீழ் தேர்தல் களம் நோக்கி வந்திருக்கின்றார்.இந்த கொள்கை பற்றாளனை வெற்றி பெறசெய்வது தாய் மண்ணில் பற்றுக்கொண்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.கேதீஸ்வரன் ஞானேஸ்வரனின் வெற்றியை ஒவ்வொருவரும் இன்றே உறுதி செய்து கொள்வோம்.10.02.2018ல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

05 ஜனவரி 2018
பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற பேராசிரியர்!
உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். ஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
சந்தீப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயா ஸ்ரீ பலியான அன்று சந்தீப் ஜெயாஸ்ரீயை வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்து செல்கிறார். சிறிது நேரத்தில் சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து தன் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறார். சற்று நேரத்தில் ஒருவர் வந்து சந்தீப் வீட்டின் கதவைத் தட்டி ஜெயா ஸ்ரீ கீழே விழுந்துகிடப்பதைத் தெரிவிக்கிறார். சந்தீப்பும் எதுவுமே தெரியாததுபோல் ஓடுகிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சந்தீப்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாதத் தாயைக் கவனித்துக் கொள்வதில் ஏற்பட்ட சலிப்பே தாயை கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று அக்கம்பக்கத்தினர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.04 ஜனவரி 2018
தான் மட்டுமே படித்தவன் என சுமந்திரன் நினைக்கிறார்!-சுரேஷ்
தமிழ் மக்களுக்கு படிப்பறிவில்லை, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு படிப்பறிவில்லை, ஊடகவியலாளர்களுக்கு படிப்பறிவில்லை, நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு படிப்பறிவில்லை, நான் மட்டுமே படித்தவன், மேதை என்னும் தோரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியிலமைப்பு இடைக்கால அறிக்கை பற்றி பேசிக் கொள்கின்றார். மேற்கண்டவாறு தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அர சியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால் அதனை எவரும் படிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.
அவருடைய கருத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாதவர்கள், சிவில் சமூகத்தினர்படிப்பறிவில்லாதவர்கள், மக்கள் படிப்பறிவில்லாதவர்கள், முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஷ்வரன் படிப்பறிவில்லாதவர் ஒட்டுமொத்தத்தில் நாங்கள் அனைவரும் அடி முட்டாள்கள் தான் மட்டுமே படித்தவன், மேதை என்பதே அதன் பொருள்.
இதனை விட அவ ர் கூறுகிறார் சமஷ்டி பெயர் பலகை இல்லை. ஆனால் சமஷ்டி இருக்கிறது. நன்றாக புகுந்து பார்க்கவேண்டுமாம். சுமந்திரன் மக்களை எந்த நிலையில் வைத்து பார்க்கிறார் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகிறார். அதாவது வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் கூறப்பட்டுள்ளதாம். அதுதான் வடகிழக்கு இணைப்புக்கான வழி. ஜனாதிபதியும், பிரதமரும் மிக தெளிவாக சொல்கிறார்கள். வடகிழக்கு இணைப்பு தொடர்பாக 73 தடவைகள் கூடிய வழிகாட்டல் குழுவில் ஒன்றுமே பேசப்படவில்லையென.
ஆனால் வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் உள்ளதாம் சுமந்திரன் சொல் கிறார். எனவே மக்கள் தீர்மானிக்கவேண்டும் இங்கே ஜனாதிபதி பிரதமர் பொய்யர்களா ? சுமந்திரன் பொய்யனா? என்பதை. எங்கள் பார்வையின் படி ஜனாதிபதியும் பிரதமரும்தங்கள் மக்களுக்கு உண்மை சொல்கிறார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு பொய்யை மட்டுமே சொல்கிறார்கள்.
நாங்கள் சொன்னோம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா சென்று அரசிடம் கேளுங்கள். அரசு கேட்காவிட்டாலும் அங்குள்ள
ஊடகங்கள் கேட்கும் அதன் ஊடாக இந்தியாக கேட்கும் இந்தியாக கேட்டால் இலங்கை அரசு அதனை கேட்கும் என சொன்னோம். அதற்கு சம்மந்தன் எமக்கு சொன்ன பதில் சிங்கள மக்களை பகைத்து கொண்டு நான் இந்தியா செல்லமாட்டேன் என்பதே. இந்த லட்சணத்தில் சுமந்திரன் எங்களை கேட்கிறார் முடிந்தால் வடகிழக்கை இணைத்து காட்டுங்கள் பார்ப்போமாம்.
இதனை விட மோசமான பேச்சு புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியில் அரைவாசி தூரம் பயணித்து விட்டார்களாம். அரைவாசி தூரம் பயணித்து என்ன சாதித்தீர்கள்? கொழும்பு-07ல் உல்லாச பங்களா, எஸ்.ரி.எப் பாதுகாப்பு. பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை, இதுதான் சாதித்தது. மக்கள் இதனால் அடைந்த பயன் ஒன்றுமில்லை. எனவே மக்கள் இந்த தடவை மாற்றம் ஒன்றை நிச்சயமாக கொண்டுவரவேண்டும் என்றார்.01 ஜனவரி 2018
முதலமைச்சரை விமர்சிப்பது கூட்டமைப்பின் அந்தரநிலையை காட்டுகிறது-கஜேந்திரகுமார்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

