பக்கங்கள்

12 பிப்ரவரி 2018

முன்னணியின் எழுச்சியையும் கூட்டமைப்பின் வீழ்ச்சியையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!

தானியங்கு மாற்று உரை இல்லை.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% வீதத்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%வீதத்தினையும் பெற்றது. வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியக்கட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 6வது இடத்தையும் பெற்றன. மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை எதிர்கொள்ளவில்லை. உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார். மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே. இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.