பக்கங்கள்

16 பிப்ரவரி 2018

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை!

16-02-2018 
ஊடக அறிக்கை 
நன்றி நவிலல் 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.

உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி 
செல்வராசா கஜேந்திரன் 
பொதுச் செயலாளர் 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.