பக்கங்கள்

04 பிப்ரவரி 2018

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று 339ஆவது நாளாகவும் தொடர்கிறது. போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார். சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார். அவரது போராட்டம் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்மையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் முன்னெடுத்தார். இதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” எனத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையிலேயே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்றும் இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.