பக்கங்கள்

22 பிப்ரவரி 2018

புகலிடம் கோரியவரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட
மறுத்திருந்தார்.‘சாந்தரூபனின் புகார் பரிசீலனையில்  இருப்பதால் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது’ என ஐ.நா.குழு ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், திடீரென ஐ.நா.வும் அக்கோரிக்கையை திரும்பப் பெற்றமை மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது.சாந்தரூபன் உட்பட எந்த அகதிகளும் நாடுகடத்தப்படக் கூடாது என சில தினங்களுக்கு முன ஆஸ்திரேலியாவில் போராட்டமும் நடைபெற்றிருந்தது. அவர் நாடுகடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தில் சிக்கக்கூடும் என ஆஸ்திரேலியாவில் செயல்படும் தமிழ் அகதிகள் மையம் கவலை தெரிவித்திருந்தது.கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சென்றிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எல்லாம் மன்னிக்கப்பட்டது, திரும்பி வாருங்கள்” என தமிழ் அகதிகளை வரவேற்றிருந்தாலும் அதனை நிராகரிக்கும் விதமாக இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகள தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில், சாந்தரூபன் என்ற தமிழ் அகதியின் நிலை என்னவாகும் என்பதில் பெரும் ஐயம் ஏற்பட்டுள்ளது. அவர் இலங்கை சென்றடைந்ததற்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.