பக்கங்கள்

21 மார்ச் 2018

ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி மைத்திரிக்கு முதல்வர் கடிதம்!

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதி, ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி வட மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி, கடந்த வாரம் உடல்நலக் குறைவினால் மரணமானார்.இதையடுத்து, அவர்களின் இரண்டு குழந்தைகளும் பெற்றோரின்றித் தவிக்கும் நிலையிலேயே கருணை அடிப்படையில் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியுள்ளார். அதேவேளை, ஆனந்தசுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியை வலியுறுத்துமாறு கோரி, ஆனந்தசுதாகரனின் உறவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் அழைப்பினையடுத்து முதலமைச்சரை சந்தித்த ஆனந்தசுதாகரனின் உறவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இதன்போது, ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தந்தையை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் உறவினர், முதலமைச்சரிடம் கையளித்துள்ளார். இதனையடுத்து, ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் தானும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அதன் பிரதியை உறவினரிடம் வழங்கியுள்ளதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்குக்காக குறுகிய நேர விடுப்பில் வந்த ஆனந்த சுதாகரனுடன் சிறைக்கு அவரது மகள் செல்ல முற்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.