பக்கங்கள்

31 ஜனவரி 2013

பொன்.காந்தன் கைதின் பின்னணியில் முக்கிய தரப்பினர்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தனிப்பட்ட செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமி காந்தன் சிக்கவைக்கப்பட்டதன் பின்னணியில் சில முக்கிய தரப்பினர் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிற்கும் லட்சுமிகாந்தனின் கைதில் தொடர்பிருக்கலாம் என்ற தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளன. கடந்த 16ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகமான இல165 கொழும்பு -8 இலுள்ள கின்சி வீதி அலுவலகத்தினில் தனக்குள்ள உயிராபத்து பற்றி புகார் செய்துவிட்டு வெளியேற முற்பட்ட வேளையிலேயே காத்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என நம்பப்படுபவர்களால் கடத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. தான் எந்நேரமும் பழிவாங்கும் வகையில் கடத்தப்படலாமென பொன்.காந்தன் தனது முறைப்பாட்டை செய்து விட்டு சித்திரவதைகளுக்கு அஞ்சி இந்தியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்காந்தன் மனித உரிமைகள் அலுவலகத்தில் தங்கியிருந்த விடயம் முள்ளிவாய்க்காலின் பின்னர் ஞானஸ்தானம் பெற்று அரச பங்காளிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள நபரொருவர் ஊடாகவே புலனாய்வுத் தரப்புகளுக்கு பரிமாறப்பட்டதாகவும் அதனையடுத்தே பொன்காந்தன் அள்ளி செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியதகவல்கள் ஏதும் வெளிவராத போதும் மூத்த சட்டத்தரணியொருவர் எதிர்பாராத விதமாக 4ம் மாடியினில் பொன்காந்தனை கண்டுள்ளார். தற்போது வேழனெனப்படும் வேழமாலிகிதனும் அதே 4ம் மாடிக்கு மேலதிக விசாரணைக்கென வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே பொன் காந்தன் மற்றும் வேழனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏதுவாக அவர்களது கடந்த கால போராட்ட பங்களிப்புக்கள் பற்றி இப்போதே படையினர் வீடு வீடாக தேடிவருவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.