பக்கங்கள்

02 ஜனவரி 2013

நல்லூர் கோவில் அருகே திடீர் இராணுவக் காவலரண்! மக்கள் கடும் அதிர்ச்சி!!

வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்துக்குச் சென்ற மக்கள் அவசரமாக இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவத்தினர் பெருமளவுக்கு அங்கு காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆலய முன்றலில் இவ்வாறு திடீரென இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் நல்லூர் பகுதியில் பொலிஸாரே பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது திடீரென இராணுவத்தினர் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளமை மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நீண்டகாலத்துக்கு நிலைகொண்டிருக்கத்தக்க வகையிலேயே இந்தக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது. ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு இது பாதகமாக அமையும் என்பதுடன், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் சுதந்திரத்தையும் இது பாதிப்பதாக அமையும் எனவும் பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்களகப் பகுதியில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உருவாக்கிய பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நல்லூர் ஆலயப் பகுதியில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.