பக்கங்கள்

29 ஜனவரி 2013

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு

போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. “கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது. ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது. தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும். பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். “ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது. தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இரண்டு நீதிமன்றங்களால், தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும், புதிய தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முடிவு எடுப்பதில் பங்களிப்புச் செய்தது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மூன்று பிரதி உதவி இராஜாங்கச் செயலர்களும் கொழும்பில் இன்று மாலை பங்கேற்ற ஊடக சந்திப்பின் போது, பிரதி உதவி இராஜாங்கச் செயலர் ஜேம்ஸ் ஆர். மூர் ஆற்றிய உரை- முன்னரே தயாரிக்கப்பட்ட ஆரம்ப உரை இது- “சிறிலங்காவுக்கு மீளவருகை தந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறிலங்காவை நெருக்கமாக அவதானிக்கின்ற வொசிங்டனிலுள்ள எனது இரு சகாக்களுடன் இங்கு வருகை தந்துள்ளேன். இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர் சிசன் மற்றும் எமது சிறிலங்கா நண்பர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். சிறிலங்காவுடன், அது சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து நீண்ட உறவை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை கொண்ட உறவை நாம் மதிப்பதுடன் அதே உணர்வுடனேயே நாம் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். சிறிலங்காவுக்கு ஜனவரி 26ம் நாள் வருகை தந்த நாம், சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்கா இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் குடியியல் சமூகத்தவர்களுடன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆக்கபூர்வமானதும் வெளிப்படையானதுமான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவ தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட நாம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர்; லலித் வீரதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம். சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது பரந்ததும் ஆழமானதுமாகும். கண்ணிவெடி அகற்றல், கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள், குடியியல் சமூகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கான உதவிகள் என சிறிலங்காவுடன் பரந்துபட்ட ரீதியில் நாம் கைகோர்;த்து செயற்படுகின்றோம் . எமது அனைத்து சந்திப்புக்களின் போதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய செயற்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்காவின் முயற்சிகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியிருந்தோம். அத்துடன், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான முயற்சிகளில் துரித முன்னேற்றம் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடியிருந்தோம். இதற்கு வெளிப்படையான ஆட்சிமுறை முக்கியம். அத்துடன் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உட்பட, போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முறையாக முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும். வினைத்திறன் மிக்க குடியியல் சமூகம், சுதந்திரமான நீதித்துறை, ஊடக சுதந்திர மற்றும் மனிதஉரிமைகளுக்கான முழு மதிப்பளிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் நாம் கலந்துரையாடியிருந்தோம். வட மாகாணசபைத் தேர்தலை சிறிலங்கா அரசாங்கம் வரும் செப்ரெம்பரில் நடத்த எண்ணியிருப்பதை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் ஊக்குவிக்கின்றோம். சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களும் சமமான உரிமைகள்; மற்றும் கௌரவத்தை அனுபவிக்கக் கூடிய வகையிலும்- பாதுகாப்பு மற்றும் சுபீட்சகரமான எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளக் கூடியதுமாக இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் நீண்டகால நண்பர்கள் என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.