பக்கங்கள்

03 ஜனவரி 2013

வன்னியில் சிங்களம் கற்பிக்க இராணுவம் நியமனம்!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் திண்டாடுவதாகத் தெரிகின்றது. 2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர். மேலும் இந்தப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெஸ்ரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினை கோரியிருந்தனர். தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர். இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறினார். இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது, தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக்கூறினார். எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.