பக்கங்கள்

13 ஜனவரி 2013

பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுவிக்கப்படுவர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரி வித்திருந்தபோதும், அவர்கள் அவ்வாறு விடுதலை செய்யப் படும் சாத்தியம் இல்லை என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் உதயனுக்குத் தெரிவித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல் கலைக்கழக வளாகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ச்சியாகப் பல பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் நான்கு மாணவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சொலமன் ஆகியோரே வெலிகந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும், யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்காவிட்டால் ஒரு வருடத்துக்கு யாழ்.பல்கலைக்கழகம் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார் உயர்கல்வி அமைச்சர். இதன்பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்துக் கடந்தவாரம் பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி பி.பி.சி. செய்திச் சேவைக்கு நேர்காணல் வழங்கிய உயர்கல்வி அமைச்சர், கைது செய்யப்பட்ட 4 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்தார். இதன்பின்னர் கடந்த 8 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் மீள இயங்க ஆரம்பித்திருந்தது. இந்தநிலையில் பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளதா என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமாரிடம் கேட்டபோது இதுவரை எமக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை. நாம் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே புனர்வாழ்வு பெற்றவர்களை விடுவிக்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்புத் தொடர்பாக இதுவரை எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.