பக்கங்கள்

13 நவம்பர் 2011

கடல்சார் பாதுகாப்பு மாநாட்டை பிரித்தானியா,தென்னாபிரிக்கா புறக்கணித்தன!

ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை நடவடிக்கை பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன் ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த ஆய்வுரையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்காததும், பிரித்தானியா, தென்னாபிரிக்கா ஆகியன வெளியேறியதும் சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஜப்பான், மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்காளாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நாளை காலை இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் இந்தியக் கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியும், புதுடெல்லியில் உள்ள தேசிய கடல்சார் அமைப்பின் பணிப்பாளருமான வைஸ் அட்மிரல் பிரதீப் கௌசிவா, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், பேராசிரியர் றொகான் குணரட்ண, சீனக் கடற்படையின் பிரதித் தளபதி வைஸ் அட்மிரல் டிங் யிபிங், கிறிஸ் தர்மகீர்த்தி, பாகிஸ்தான் கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பிரதி தலைமை அதிகாரி றியர் அட்மிரல் கான் ஹசாம் பின் சாதிக், மலேசிய கடற்படையின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளுக்கான உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் டதோ முசா பின் ஒமர், இந்தியக் கடற்படையின் நடவடிக்கை முதன்மைப் பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன், மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையின் லெப்.கேணல் முகமட் இப்ராகிம் , சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் கொலம்பகே ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.