பக்கங்கள்

04 நவம்பர் 2011

மனோ கணேசனை வளைத்துப்போட மகிந்த கட்சி தீவிரம்?

கொழும்பு மாநகரசபை தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக அரசாங்க தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. இந்தப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்பதில் அரச தரப்பு அக்கறையுடன் உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
கொழும்பு மாநகரசபையின் 16 நிலையில் குழுவில் ஒவ்வொரு குழுவிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நால்வரும் சேர்க்கப்பட வேண்டும் (இருவர் மட்டுமே ஆளுந்தரப்பில்) என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையைச் சாத்தியப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே மனோ கணேசனுடன் அரசு தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துரையாட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
நிதிக் குழு உட்பட்ட பதினாறு நிலையில் குழுவிலும் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் நால்வர் வீதம் நியமிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனைச் சாத்தியப்படுத்தவதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியிடமே தற்போது உள்ளது.
எதிர்வரும் எட்டாம் திகதிக்கு முன்னர் நிதியில் குழு உட்பட ஆகக் குறைந்தது மூன்று குழுக்களாவது நியமிக்கப்பட வேண்டிய நிலையிலேயே இரு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி) மற்றும் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மனோ கணேசனின் ஆதரவை நாட வேண்டியேற்றபட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி அணியினருக்கு மனோ கணேசன் கட்சி ஆதரவளிக்குமாயின் குறிப்பிட்ட நிலையியல் குழுக்களில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்து விடும் எனவும் எமக்குச் சுட்டிக் காட்டிய அந்த வட்டாரங்கள், எதிர்க்கட்சிகளுக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட) ஆதரவளித்தால் கொழும்புப் பிரதேச தமிழ் பேசும் மக்கள் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மீது அதிருப்தி கொள்வர் எனவும் தெரிவித்தன.
இந்த விடயம் தொடர்பில் மனோ கணேசனை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,த மது கட்சியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கான பிரயத்தனங்களில் அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் முயற்சிப்பதாகத் தமக்கும் கிடைத்த தகவல்கள் மூலம் அறிய வருவதாகவும் ஆனால் இதுவரை அவ்வாறு எவரும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.