பக்கங்கள்

27 நவம்பர் 2011

தலைவரின் பிறந்த நாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய யாழ்,பல்கலை மாணவர்கள்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தை கடந்த இரண்டு நாட்களாக சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் சுற்றி வளைத்துள்ளனர்.தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் உயிரீகம் செய்த மாவீரர்களை நினைவில் கொள்ளும் மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், கடந்த 24ஆம் நாள் மாவீரர்களை நினைவேந்தியும், தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே படையினரும், படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, கல்விச் சமூகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மறுநாள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நேற்று (26-11-2011) தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ஆக்கிரமிப்புப் படையினர், பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி தொடர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
52-5476 என்ற இலக்கத்தகடுடைய கறுப்பு நிற பிக்-அப் ரக ஊர்தியும், இலக்கத்தகடு அற்ற வெற்ளைச் சிற்றூந்தும் பல்கலைக்கழகத்தை சுற்றி நேற்றிரவு வரை வட்டமிட்டுக்கொண்டிருக்க, பொது உடையில் படைப் புலனாய்வாளர்கள் சுற்றிவர குவிக்கப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும், இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவியது போன்றும், சிங்களத்தை தலைகுனிய வைத்தது போலவும், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு துணிகரமாகப் பட்டாசு கொழுத்தி தேசியத் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுகின்றனர் என அச்சமடைந்து அங்கு சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பி இருக்கின்றனர்.
இன்றைய தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் குவிக்கப்பட்டிருப்பதாக உள்ளே இருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.
சிறீலங்கா அரசாங்கமும், படைகளும் மேற்கொள்ளும் இவ்வாறான ஆயுதமுனை அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது என்ற தகவலை தாயக மக்களிற்கும், புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த முக்கிய நாளில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.