பக்கங்கள்

17 நவம்பர் 2011

அகதிகளை திருப்பி அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்வதாக உறுதி.

சுவிற்ஸர்லாந்து மற்றும் பிரிட்டனில் அரசியல் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளைத் திருப்பியனுப்பும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்தூதரகம் என்னிடம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.
அண்மையில் வத்திக்கான், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜயலத் ஜயவர்த்தன நேற்றுமுன்தினம் நாடு திரும்பினார்.தனது பயணத்தின்போது வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாகவும், சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறித்தும் வெளிநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு:
நான் சுவிற்ஸர்லாந்துக்கு சென்றிருந்தபோது அங்குள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் தூதரகத்தில் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்துப் பேசினேன்.சுவிற்ஸர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்துவதற்கு எடுத்திருக்கும் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், இலங்கையில் யுத்தம் முடிந்துள்ளபோதிலும் நிலையான, ஆரோக்கியமான சமாதானச் சூழல் ஏற்படுத்தப்படவில்லை என்பதால் அந்த அகதிகளை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அவ்வளவு உகந்ததல்ல என்பதை இதன்போது சுட்டிக்காட்டினேன். அதுமட்டுமின்றி, சுவிஸிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடமும் சென்று இவற்றை எடுத்துரைத்தேன். அதற்கு இரு தரப்பினரும் இந்தத் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர். சுவிஸ் குடிவரவுத் திணைக்களமும் இதனை கவனத்திற்கொள்வதாகத் தெரிவித்தது.
இதேவேளை, வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளார். அவர் மீது உங்கள் கவனம் திரும்பவேண்டும் என்று பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்தவேளை கோரிக்கை விடுத்தேன் என்றார் ஜயலத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.