பக்கங்கள்

06 நவம்பர் 2011

கிளிநொச்சியில் கடும்மழை,மக்கள் பெரும் அவதி.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் வீடற்ற நிலையில் கொட்டில்களில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து நேற்று மாலை கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மழை ஓய்ந்திருந்தது. ஓய்ந்திருந்த மழை நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் ஆரம்பமானது.
ஒரு மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக சுமார் 5 மணித்தியாலங்கள் மழை கொட்டித் தீர்த்தது.
இரவு சுமார் 7 மணியளவில் மழை ஓரளவு ஓய்ந்திருந்தது.
கடந்த இரு தினங்கள் மழை ஓய்ந்திருந்தமையால் சில விவசாயிகள் வயல்களில் நெல் விதைப்பையும் மேற்கொண்டனர். விவசாயிகளால் இவ்வாறு விதைப்புச் செய்யப்பட்ட நெல் நேற்றுப் பெய்த மழையினால் வெள்ளத்தில் அள்ளுண்டு போய் விட்டது.
கிளிநொச்சியில் ஏற்கனவே காலம் பிந்திப் பெய்த மழையினால் நெற்செய்கை மோசமாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் விவசாயிகளால் கடந்த தினங்களில் விதைப்புச் செய்யப்பட்ட நெல்லும் நேற்றைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காலம் பிந்திய மழையினால் இந்த முறை கிளிநொச்சியில் நெற் செய்கை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.
நேற்றுப் பிற்பகல் முதல் சுமார் 5 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாகக் கொட்டிய மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நிரந்தர வீடற்ற நிலையில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி உள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இடம்பெயர்வின் பின்னர் தற்காலிக கொட்டில்களை அமைத்தே மீள்குடியமர்ந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
நேற்றுப் பெய்த மழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இதனால் சில இடங்களில் தற்காலிக கொட்டில்களுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது.
இவற்றில் வசித்த மக்கள் பெரும் கஷ்டத்துக்கு உள்ளானார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிகளை மூடியும் சில பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை எனவும், இவற்றில் 16 ஆயிரம் வீடுகள் மட்டுமே நிறுவனங்களினால் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன எனவும் அந்தக் குடும்பங்களில் இதுவரை 6 ஆயிரம் வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஏனைய குடும்பங்களுக்கான வீடமைப்புப் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படாமையால் அந்தக் குடும்பங்கள் தற்போது தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன. இந்தக் குடும்பங்களுக்கு அரசினால் தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான தறப்பாள்களே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுப் பெய்த மழையினால் இவ்வாறு தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் இந்த மழை தொடர்ந்து நீடிக்குமானால் இந்தக் குடும்பங்களின் நிலை மேலும் மோசம் அடைவதுடன் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இந்த மழை காரணமாக கிளிநொச்சியின் சில இடங்களில் வீதிகளும் சேதத்துக்கு உள்ளாகின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.