பக்கங்கள்

04 நவம்பர் 2011

போர்க் குற்ற விசாரணை நடைபெற்றால் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது அம்பலமாகும்.

போர்க்குற்றத்தை விசாரணை செய்து அக்குற்றச்செயல்களை புரிந்தவர்களை தூக்கில் போடுவதால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
உண்மையில் போர்க்குற்றம் விசாரணை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்டார்கள் என்பது நிரூபிக்கப்படும். அத்துடன், சிங்கள அரசுகளினால் சிங்கள பெரும்பான்மை இனத்தால் தமிழினம் அழிக்கப்பட்டது என்ற செய்தி உலகத்திற்கு தெரியவரும். மேலும் தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழமுடியாது என்ற உண்மை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக புலப்படுத்தப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தமையானது அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பிரச்சினைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்வதற்கு அரசாங்கம் முயல்கின்றது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயவில்லை. இலங்கையில் அமைதி, நிம்மதி வரவேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
வடக்கில் தமிழர் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர், தமிழர்களின் காணிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்களைச் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். முறிகண்டிக் கோயிலுக்கு அருகில் உள்ள அறிவியல் நகர்ப்பகுதியில் சிங்கள மக்கள் காணிகளை விலைக்கு வாங்கி அங்கு குடியேறி வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாதுவிட்டால் அமைதியான நிம்மதியான சகவாழ்வும் சகோரத்துவமும் இலங்கையில் எக்காலத்திலும் நிலைக்காது. இதனை சிங்கள தேசம் உணரவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.