பக்கங்கள்

16 ஆகஸ்ட் 2011

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் நடத்திய போராட்டம்.

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஜந்து ஊடக கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு ஊடகவியலாளர்கள் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்திருந்;தனர்..இன்று காலை செவ்வாய் கிழமை 11.00 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் சுலோகங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிராகவும் சுலோகங்களை எழுப்பினர்.
இதனிடையே ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக வாகன போக்குவரத்தை சீர் செய்து வழங்க பொலிசார் மறுத்ததையடுத்து இருதரப்புக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வீதிப்போக்குவரத்தை தடை செய்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து ஊர்வலமாகவும் புறப்பட்டனர். ஆஸ்பத்திரி வீதி வழியே சென்ற ஊர்வலம் பின்னர் திரும்பி பழைய இடத்தை வந்தடைந்திருந்தது.அங்கு கண்டன கூட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவான் ஆகியோர் கலந்து கொண்டிந்தனர். ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஜே.வி.பியின் சந்திரசேகரன் உட்பட பலரும் இவ்வார்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ஜந்து ஊடக கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பதாக அண்மையில் நடாத்தப்பட்டிருந்தது .முன்னதாக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்த வேளை சுதந்திர ஊடக இயக்கம் ஆர்ப்பாட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு செய்திருந்தது.
எனினும் சுதந்திர ஊடக இயக்கத்துடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் வர அரசு அப்போது அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் சுமார் பதினொரு வருட இடைவெளியின் பின்னர் அவ்வாறான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.