பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2011

கோரிக்கைகளுக்கு பதில் இல்லையேல் பேச்சுவார்த்தை முறிவடையும்.

அதிகார பரவலாக்கலுடனான நிர்வாக கட்டமைப்பு, மத்திய மற்றும் நிலையான அலகுகள், நிதி மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அளிக்காவிட்டால்
எதிர்கால பேச்சுக்களில் தாம் பங்கு பற்றப்போவதில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற 10ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தையின் போது அரசாங்கம் இரு வாரங்களுக்குள் அதிகாரப்பரவலாக்கல் குறித்து எழுத்து மூலமாக பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததாகவும் அந்த அறிக்கையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்கில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற அதேவேளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் நம்பத்திற்குரிய பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து 2011 ஜனவரி மாதம் தொடக்கம் 10 சுற்றுப்பேச்சு வார்த்தைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. அரசியல் தீர்வு பற்றியும், தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் பற்றியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்த பேச்சுக்களின் போது கவனம் செலுத்திய போதிலும் அரச தரப்பு இந்த விடயங்கள் குறித்து எத்தகைய அக்கறையையும் கொண்டவர்கள் என்பதற்கான சமிக்கைகள் காட்டப்படவில்லை.
உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும், தடுப்பு காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள், போராளிகளின் விபரங்களை வெளியிட வேண்டும், துணை இராணுவ குழக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தியிருந்தது.
ஆனால் இந்த விடயங்களில் அரச தரப்பு அளித்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்பட வில்லை. இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலுமே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்க பட்டிருக்கிறார்கள். துணை இராணுவ குழுக்களின் கடத்தல், கப்பம் பெறுதல், கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆவணம் ஒன்றை பேச்சுவார்த்தையின் போது முன்வைத்திருந்தது. அதிகாரப்பரவலாக்கல் , நிர்வாக கட்டமைப்பு, மத்திய மற்றும் மாநில அலகுகள், அவற்றுக்கான நிதி அதிகாரங்கள், தொடர்பான ஆவணம் ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் அரசு அதற்கு எந்தவிதமான பதிலையும் வழங்க வில்லை. இதற்கு சரியான பதிலை இதய சுத்தியோடு வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உணர்ந்து கொள்கிறது.
தொடர்ந்து ஏமாற்றும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கருதுகிறது. எனவே நாம் முன்வைத்திருக்கும் மூன்று விடயங்களுக்கும் இரு வாரங்களுக்குள் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.