பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2011

இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை அவசியம்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிர்சபைஈசன் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பை, கனடா வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரும் மக்களுக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படக் கூடிய வகையில் பக்கச்சார்பற்றதும், நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முனைப்பு காட்ட வேண்டும் எனவும், அதற்கு கனடா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடா பொறுப்பாளர் அலெக்ஸ் நேவி தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் சயெல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ள போதிலும் அது பொருத்தமாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் போது தமது தரப்பில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை விவகாரம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கும் ஆதரவளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.