பக்கங்கள்

08 ஆகஸ்ட் 2011

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட மனோ கணேசன் முடிவு.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, மொரட்டுவ, நீர்கொழும்பு ஆகிய மாநகரசபைகளிலும், கொலன்னாவ மாநகரசபைக்காகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்ட காலமாக ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் அநேகமாக தமது கட்சி தனித்து போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் நல்லையா குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததுடன், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது. நட்புறவான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏணி சின்னத்தில் போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கில் நடைபெற்ற தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, ஜனநாயக மக்கள் முன்னணி பிரச்சாரங்களை செய்திருந்தது.
கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவிக்காக கட்சியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி நான்கு ஆசனங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.