பக்கங்கள்

18 ஆகஸ்ட் 2011

தமிழர் பகுதிகளில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இந்த மாவட்டங்களில் 30 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்புச் அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 9 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகாரியொருவர் தெரிவித்தார்.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
15 வயதிற்குபட்ட 11 சிறுமிகளும் ஒரு சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை 9 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பாலியல் துஷ்பிரயோகங்கள் அவர்களது உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும் மேற்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் தமது கணவர்மார்களை இழந்து விதவைகளாகியுள்ள நிலையிலும் பல பெண்களின் கணவமார்கள் தடுப்புக்காவலிலுள்ள நிலையிலும் குடும்ப சுமையை பெண்களே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பெண்கள் தொழிலுக்காக வெளியில் செல்வதால் பிள்ளைகள் தவறான வழியில் செல்லும் சூழ்நிலை காணப்படுவதுடன், பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்றதொரு சூழ்நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, பொருளாதாரப் பற்றாக்குறை, பெற்றோர்களின் கவனயீனமின்மை, சிறுவர்களுக்கு போதியளவான அறிவின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புக்கள் மற்றும் சனநெருக்கமற்ற குடியிருப்புக்கள் போன்றனவும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், கிராமங்கள் தோறும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.