பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2013

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அஸ்வர்!

கொழும்பில் இருந்து தமிழ் மக்களை கைது செய்து பஸ் வண்டிகளில் ஏற்றி அனுப்பிய பொது பாராளுமன்றத்தில் தான் மட்டுமே அதற்கு எதிராக குரல் கொடுத்ததாக அஸ்வர் எம்பி ஊடகங்களில் கூறியுள்ளது அப்பட்டமான உண்மைக்கு புறம்பான கருத்தாகும். இலங்கை வரலாற்றில் கருப்பு மையினால் எழுதப்பட்ட இந்த சம்பவம் 2007ம் வருடம் ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் கொழும்பில் வாழ்ந்திருந்த தமிழர்களை அதிகாலை வேளையில் தட்டி எழுப்பி பஸ் வண்டிகளில் ஏற்றி வடக்கு, கிழக்கு, மலையக நகரங்களுக்கு இந்த அரசாங்கம் அனுப்பி வைத்தது. 2007ம் வருடம் அஸ்வர் எம்பி பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கவில்லை. அவரது ஐதேக தேசிய பட்டியல் எம்பி பதவி 2004ம் வருடத்துடன் முடிந்துவிட்டது. தற்போது அவர் இன்றைய அரசாங்க எம்பியாக 2010ம் வருடம் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலை 2007ம் வருடம் பாராளுமன்றத்தில் இல்லாத அவர் எப்படி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்க முடியும்? கொழும்பில் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் எழுப்பி போராடியவர் எமது தலைவர் மனோ கணேசன் என்பது உலகறிந்த உண்மை. நமது தலைவருடன் இணைந்து, அவ்வேளையில் மகேஸ்வரன் எம்பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்பீக்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். பாராளுமன்றத்தில் அன்றைய நிகழ்வுகளை இடை நிறுத்தி, விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்ததை கூட்ட செய்து நமது தலைவர் இது தொடர்பாக நமது தலைவர் பாரிய பங்காற்றியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவ்வேளையில் அங்கத்தவராகவே இருந்திருக்காத அஸ்வர், தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது தான் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருந்து குரல் எழுப்பியதாக இன்று தமிழ் ஊடகங்களில் கூறியிருப்பது பச்சை பொய். இதன்மூலம், அஸ்வர் எம்பி உண்மைக்கு புறம்பாக கருத்து கூறி தமிழ் பேசும் மக்களையும், தமிழ் ஊடகங்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்தின் தேவைகளுக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்குமே அஸ்வர் எம்.பி. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றாரே தவிர தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் அவர் குரல் கொடுத்ததில்லை. கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்ட போது, அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் எமது தலைவர் மனோ கணேசனே தவிர, அன்று அஸ்வர் எம். பி பாராளுமன்றத்திலும் இருக்கவில்லை. தன்னை தமிழர் நலன்விரும்பியாக அஸ்வர் திட்டமிட்டு காட்டிக்கொள்கிறார். இதற்கு பினால் ஒரு சதி இருப்பதாக நாம் சந்தேகப்படுகிம்ன்றோம். இன்று பாராளுமன்றத்தில் எம்பியாக அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தமிழர் எதிர்ப்பு விடயங்களுக்கு ஒத்து ஊதுகின்றார். அது மட்டுமல்ல வடக்கு தமிழ் மக்களின் காணி பறிப்பு விவகாரத்தை சபையில் சம்பந்தன் எம்பி முன்வைத்த போது சட்டப் பிரச்சினையைக் கிளப்பி பாராளுமன்ற சம்பிரதாயங்கள் எனக் கூறி அதை தடுக்க முனைந்தார். பத்திரிகைகளில் அவரது பாராளுமன்ற உரைகளின் உண்மைகளை எழுதினால் அதனை மறுக்கின்றார். அவரது சமீபத்து உரையில் தமிழ் பெண்களை மலினப்படுத்தும் விதமாக அவர் தெரிவித்த கருத்தை நாம் ஆட்சேபித்திருந்தோம். இப்போது தான் அப்படி பேசவில்லை என அவர் கூறுவது வியப்பாக உள்ளது. அவரது பாராளுமன்ற உரையை வெளியிட்ட அனைத்து தமிழ் ஊடகங்களின் சபை நிருபர்களும் ஒரே மாதிரியாக அஸ்வரின் உரையை பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்போது தான் அவ்விதமாக உரையாற்றவில்லை என அஸ்வர் பழியை தமிழ் ஊடக சபை நிருபர்களின் தலைகளில் தூக்கி போடுகின்றார். பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற சிறப்புரிமைகள் காரணமாக தமிழ் ஊடகங்கள் அவரது மறுப்பை பிரசுரித்துள்ளன. ஆனால், இப்போது தான் பாராளுமன்ற உயர்ப்பினராக இல்லாத வேளையில், தான் பாராளுமன்றத்தில் இருந்து குரல் கொடுத்தாகவும், அதுவும் எமது தலைவர் மனோ கணேசன் உட்பட தமிழ் எம்பீக்கள் சும்மா இருந்தார்கள் போன்று அர்த்தப்படும் விதமாக தான் மாத்திரம் குரல் கொடுத்ததாகவும் ஊடகங்களுக்கு கூறுவது பாராளுமன்ற மற்றும் பொது சம்பிரதாயங்களை மீறும் செயல் இல்லையா என அஸ்வர் எம்பீயிடம் நான் வினவ விரும்புகின்றேன். அஸ்வர் எம்.பியவர் பாராளுமன்றத்தில் யாருக்காக குரல் கொடுக்கின்றார் என்பதையெல்லாம் தமிழ் சமூகமும், அவர் சார்ந்த முஸ்லிம் சகோதர சமூகமும் நன்கறியும். தாம் சார்ந்த சமூகத்திற்கே எதுவிதமான நன்மைகளையும் செய்யாத இவர் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பை தமிழ் தலைவர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கி விடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.