பக்கங்கள்

02 ஆகஸ்ட் 2013

முள்ளிவாய்க்கால் ஞாபகத்தில் வெலிவேரியாவில் சுட்டு விட்டனர்!

முள்ளிவாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த மக்களை சுட்ட ஞாபகத்தில் வெலிவேரியாவிலும் மக்களை சுட்டுவிட்டனர் -இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர். அங்கு நின்ற மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறையை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காண முடிந்தது என்று கூறினர். இராணுவத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வலியுறுத்தினர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.