பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2013

மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி!


வெலிவேரியா சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி எதற்காக முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் வடமகாண சபைத் தேர்தலில் எல்லா சிங்கள இனவாதக் கட்சிகளையும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாணையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை மக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படியே 40 ஆயிரம் பேர் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் வெலிவேரியா சம்பவத்தில் சிங்கள மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதற்காக இதற்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை. வலி.வடக்கிலும் இன்று சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது. இவை தொடர்பில் அரசோடு சேர்நதுள்ள ஈ.பி.டி.பி ஏனையவர்களும் மௌனமாக இருக்கின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று சொன்னார்கள். ஆனால் இன்று மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி தான் நடக்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் அடிப்படையில் உருவான மாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக நாங்கள் போட்டியிடுவது இந்த தேர்தலில் போட்டியிடாது விட்டால் அரசிற்கு வேண்டிய அடிவருடிகள் மாகாண சபையைக் கைபற்றி தவறாக செய்திகளை உலகிற்கு சொல்லி விடுவார்கள் என்பதாலேயோகும். கூட்டமைப்பினரின் வெற்றிக்கு அஞ்சியே தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுயட்சைக் குழக்களையும் களமிறக்கியுள்ளது. அற்ப சொற்ப விடங்களுக்காக மாகாண சபை ஆளும் கட்சியினருக்கு செல்லக் கூடாது. மாகாண சபையைக் கைப்பற்றியதும். நாம் அனைவரும் ஒன்றாக இராஜினமா? கூட செய்யலாம். ஆனால் நடப்பது என்னவென்று தெரியாது. கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவினை அடுத்து வடக்கு கிழக்கு பிரிந்தது. இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபைகளின் பிரிப்பினை எதிர்த்து கூட்டமைப்பினர் போட்டியிடவில்லை. இதனால் பிள்ளையான போன்றவர்கள் முதமைச்சராகிய விருப்பதாகாத சம்பவங்கள் நடைபெற்றன. எனவே 2012ஆம் ஆண்டு மாகாண சபைத் தோத்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவினை கூட்டமைப்பு பரீசிலனை செய்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. மாகாண சபை மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் அதில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்திகளை கூறுவோம். இலங்கை இந்திய ஒப்பந்த்தில் உருவான மாகாண சபை தமிழர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல. இதனை ஒரு ஆரம்ப புள்ளியாகவே எடுத்துக் கொள்ள முடியும். உயிர்நீத்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீர்கள் மற்றும் லட்சக்காணக்கான போராளிகளின் உயிர்த் தியாகங்களுக்கு மாகாண சபை ஒரு தீர்வல்ல. இந்த தேர்தலில் தமிழின அழிப்பு செய்தோரை தோற்கடியுங்கள். தமிழர்களுக்கு நீதி வழங்க வாக்களியுங்கள் என்று தான் கோருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையென்றையே நாம் கோருக்கின்றோம். அதற்கான செய்தியை உலகிற்கு சொல்லும் விதமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.