பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2013

இன்று ஆடி அமாவாசை விரதம்!

இந்துகளின் முக்கிய விரதங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவில் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து தீர்த்த மாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கேஸ்வரர் கோவில் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டு அமிர்தகழி கேணியில் பிதிர் கடனை செலுத்தி தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதிர் கடன் செலுத்துவர். இதேபோன்று கொழும்பு முகத்துவாரம் கோயிலிலும்,சிலாபம்,மாயவனாற்றங் கரையிலும், திருக்கேதீஸ்வரம் பாலாவி கரையிலும் புனித ஆறுகளிலும், நீராடி பிதிர்கடன் நிறைவேற்றுவர். இன்று புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம் மற்றும் இந்தன் முத்துவிநாயகர் ஆலயம் மற்றும் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றிலும் விசேட பூசைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.தீவக மக்கள் சாட்டி வெள்ளைக் கடற்கரையில் நீராடி தமது பிதிர் கடனை நிறைவேற்றிக்கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.