பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2013

யாரும் காணாமல் போகவில்லை வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டார்கள்-கோத்தபாய

சிறிலங்காவில் போரின்போது காணாமற்போனவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள பலர் வெளிநாடுகளில் புதிய அடையாளத்துடன் வாழ்வதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு காணாமற்போனதாக பட்டியலிடப்பட்ட ஒருவரை கனடா நாடுகடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “முன்னதாக நாடுகடத்தப்பட்டவரின் தாயார், போர் முடிவுக்கு வந்த பின்னர் தனது மகன் எங்கே என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். இது ஒன்றும் தனித்ததான ஒரு சம்பவம் அல்ல. இங்கே காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கு தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள். சில வெளிநாட்டு அரசாங்கங்கள், எம்முடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. போதிய பாதுகாப்பின்மையால், வெளிநாடுகளில் அரசியல் அடைக்கலம் தேடியவர்கள் பொய்யான பெயர்களில் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற முடிகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஒருகாலத்தில் ஜேவிபி முன்னணி உறுப்பினராக இருந்த பிறேம்குமார் குணரட்ணத்துக்கு வேறோரு பெயரில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். வவுனியா மருத்துவமனையில் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த போது சிலர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன் நிலவிய குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, வவுனியா மருத்துவமனையில் இருந்து புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் முக்கியமான போராளிகள். வெளிநாடுகளில் தங்கியுள்ள அவர்களிடம் விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கம் கோரழிக்கைகளை விடுத்த போதிலும், அதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்தழைக்க மறுத்து விட்டன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.